#Breaking : தமிழகத்தில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.!
தமிழகத்தில் ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்கனவே மாநிலம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தடைகள் தொடரும் எனவும், எந்தவித தளர்வும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே உள்ள தளர்வுகளோடு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதாவது, மாவட்டங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. வெளிமாவட்டங்களுக்கு செல்ல அனுமதி பெற வேண்டும். அரசுபணி மற்றும் தனியார் நிறுவன வேலைகளுக்கு செல்ல அரசு / தனியார் பேருந்துகளில் 20 நபர்கள் செல்லலாம். வேன்களில் 7 நபர் மட்டுமே செல்லலாம். தேசிய ஊரக வேலை அளிப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத பணியாட்களை வேலைக்கு அனுமதிக்கலாம். 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தவிர பிற மாவட்டங்களில் 100 வேலையாட்களுக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்கள், 100 சதவீத வலையாட்களுடனும், 100 ஊழியர்களுக்கு அதிகமானவர்களை கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பணியார்களுடன் இயங்க அனுமதி.
ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்களை பராமரிப்பு பணிகளுக்காக சில வேலையாட்களை நியமித்து பணி செய்ய அனுமதி.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்காக தயார் ஆகும் வீரர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், சென்னை மாநகராட்சி ஆணையரிடமும் அனுமதி பெற்று தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறலாம்.
நோய் தொற்று வருங்காலங்களில் குறைவதை தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான தடைகள் தொடரும்.