உள்ளாட்சித் தேர்தல் :9 மாவட்டங்களில் வேண்டாம்,பிற மாவட்டங்களில் நடத்தலாம் -உச்சநீதிமன்றம் கருத்து
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட விதிகளை முறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது திமுக தரப்பில் உரிய சட்ட முறைகளை கடைபிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது .மாவட்ட தேர்தல் அதிகாரிதான், வார்டு மறுவரையறை அதிகாரியாகவும் உள்ளார் .பின்பு உச்சநீதிமன்றம்,பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் முடியாத நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா? என்று கேள்வி எழுப்பியது.இதற்கு 9 புதிய மாவட்ட தொகுதி மறுவரையறைக்காக முழு தேர்தலுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும், வேண்டுமெனில் 9 புதிய மாவட்டத்துக்கு மட்டும் தேர்தலை தள்ளி வையுங்கள் என்று தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இறுதியாக நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.மேலும் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.