தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி, அந்த கூட்டத்தொடரில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நேற்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட் தாக்கல்:
- இந்த பட்ஜெட்டில் வேளாண்மை, சார்புத்துறைகளுக்கு ரூ.34,220.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தொலைநோக்கு பார்வையுடன் இருந்த தமிழக அரசின் தனி வேளாண் பட்ஜெட் சுமார் 2 மணி நேரம் நீடித்த உரையை முடித்தார் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்.
- இயற்கை விவசாயி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
- 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காவிரி டெல்டாவில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது – அமைச்சர்
- ரூ.5 கோடியில் பலாப்பழ சிறப்பு மையம் அமைக்கப்படும்.
- வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்க 185 டிராக்டர்கள், 185 ரோட்டரேட்டர்கள், 4 மருந்து ட்ரோன்கள் கொள்முதல்.
- அரசு மீன் பண்ணைகள், மீன் விற்பனை அங்காடிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.7.07 கோடி ஒதுக்கீடு.
- வேளாண்மை தொழில் முனைவோரை ஈர்க்கும் தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் அமைக்கப்படும்.
- பசுந்தீவன வங்கிகளை ஏற்படுத்துதல், கால்நடை நலம், நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணைக்கு ரூ.27.12 கோடி ஒதுக்கீடு.
- கறவை மாடு வளர்ப்போரின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.14.28 கோடி ஒதுக்கீடு.
- நாடெங்கும் உள்ள வியாபாரிகளை விவசாயிகளுடன் இணைக்க மின்னணு ஏல முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
- சென்னை கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும். கிருஷ்ணகிரியில் 150 ஏக்கரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கிடு
- கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலை கல்வி அறிமுகம். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்.
- மீன்பதப்படுத்துதல் மையம் நாகை மற்றும் தேங்காய் – பண்ணை கோவை, வாழை – திருச்சி, சிறுதானியங்கள் கிடங்கு விருதுநகரில் அமைக்கப்படும்.
- நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சந்தைப்படுத்த எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை அமைக்கப்படும்.
- ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கு என ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படும். இதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜீனூரில் 150 ஏக்கரில் தோட்டக்கலை கல்லூரி ஒன்று தொடங்கப்படும். இதற்கென நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- பொன்னி அரிசி, கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா போன்ற விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
- 15 மாவட்டங்களில் ரூ.3.5 கோடியில் 28 உளர் களங்கள் அமைக்கப்படும்.
- நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.50 லட்சத்திற்கு மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.
- சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் (or) 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
- விவசாய விளைபொருள்களை அருகில் உள்ள பெரு நகர சந்தைகளுக்கு எடுத்துச் சென்று லாபகரமாக சந்தைப்படுத்துவதற்கு சிறிய இலகுரக சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டம் 59 கோடியே 55 லட்சம் செலவில் மாநில அரசின் நிதி ஒதுக்கப்படும்.
- விளைபொருட்கள் அழுகாமல் பாதுகாக்க பண்ருட்டி, ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 கோடியில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.
- கடலூர்,திண்டுக்கல், ஈரோடு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி,வேலூர், கரூர்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பேரூராட்சிகளிலும் நகர்ப்புறங்களிலும் சிறிய அளவிலான உழவர் சந்தைகள் நடப்பாண்டில் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
- திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்.
- 20000 ஹெக்டேர் தென்னந்தோப்புகளில் சொட்டுநீர் பாசனமுறை நடப்பாண்டில் ஏற்படுத்த திட்டம், இந்த ஆண்டு 17 லட்சம் தரமான தென்னங்கன்று உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் தரப்படும்.
- அண்ணா பண்ணை மேம்பாடு திட்டத்திற்கு ரூ.21.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- 50 உழவர் சந்தைகளின் தற்போதையை நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு.
- உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புணரமைக்கப்படும்.
- கூட்டுப்பண்ணைய திட்டத்திற்கு ரூ.59.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ரூ.1 லட்சம் செலவில் 100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
- 1,700 நீர்சேமிப்பு கட்டமைப்புகளில் ரூ.5 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
- வட்டார அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன முறையில் பூச்சிமருந்து தெளிக்க 4 ட்ரான்கள், டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்கள் வாங்க ரூ.23.29 கோடி ஒதுக்கீடு.
- கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்.
- தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம்.
- 50 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும்.
- புதிய விவசாய தொழில் நுட்பங்களையும் இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்.
- குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய இரண்டு லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.
- விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக்குழு தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும்.
- காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டம் ரூ.95 கோடியில் செயல்படுத்தப்படும்.
- அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும், 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும்.
- அரவை பருவத்தில் டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.150 வழங்கப்படும்.
- கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750ல் இருந்து ரூ.2,900 ஆக உயரும்.
- இதன் மூலம் விவசாயிகள் கரும்பு விலையாக டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள்.
- கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று ” சிறப்பு ஊக்கத்தொகையாக ” டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாகக் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வழங்க அரசு முடிவு.
- கரும்பு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்.
- சிறுதானிய இயக்கம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
- உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான மானிய திட்டம் ரூ.114.68 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
- சூரிய சக்தியால் இயங்கும் 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும்.
- கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு..
- இந்தாண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க மின்சாரம் தர மின்சார வாரியத்திற்கு ரூ.4,508.23 கோடி ஒதுக்கீடு.
- பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.29.12 கோடி ஒதுக்கீடு.
- பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு.
- தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு திட்டத்தை செய்யப்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு.
- மரபு சார் விதை நெல் உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- சன்ன ரக நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ஊக்கத்தொகை ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படும். அதாவது, ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படும்.
- பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்.
- பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.
- தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம்.
- பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகப்பதற்காக 36 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் மரக்கன்றுகளும் முழு மானியத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்திட மானியம் வழங்கப்படும்.
- 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
- முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு.
- பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு.
- இந்த திட்டம் 52 கோடியே 2 லட்சம் செலவில் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
- அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும்.
- நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ரூ.25 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்.
- படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.2.68 கோடி ஒதுக்கீடு.
- கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்.
- சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை விவசாயிகள் திட்டம் செயல்படுத்தப்படும்.
- அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போல கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிவிப்பு.
- வேளாண்மையின் பெருமையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள சென்னையில் மரபுசார் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
- திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
- வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனி பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.
- தரிசு நிலங்களை மாற்றிட குளங்கள், பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும்.
- சாகுபடி பரப்பு 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்தப்படும்.
- இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை.
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம், தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும்.
- தென்னை, கம்பு, சூரிய காந்தி உள்ளிட்ட பயிர்களில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை தமிழ்நாடு எட்டிட வழிவகை செய்யப்படும்.
- வேளாண்மை என்ற சொல்லே நெடிய வரலாறு கொண்டுள்ளது.
- 10 லட்சம் எக்டர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த 10 ஆண்டுக்குள் 20 லட்சம் எக்டர் ஆக உயர்த்தப்படும்.
- தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்னரே வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- வேளாண் வணிகர்களையும் கருத்துக்கேட்ட பின்னரே வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன்! – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தனி வேளாண் பட்ஜெட் உரையை நிகழ்த்தி வருகிறார்.