#LIVE: தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல்! இதோ உங்களுக்காக!

Default Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து வருகிறார். இதுபோன்று வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

காகிதமில்லா சட்டமன்றம் திட்டத்தின் கீழ் கணினி மயமாக்கப்பட்டுள்ள ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற அரங்கத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கைக்கு முன்பாகவும் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை கையட்ட கணினியுடன் சட்டமன்றத்திற்கு வந்து தாக்கல் செய்திருந்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதன்படி 2022-23 நிதி நிலை அறிக்கையையும் கையடக்க கணினியில் எடுத்து வந்து தாக்கல் செய்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்:

  • நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
  • 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்.
  • பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
  • மாநிலத்தின் நிதிநிலை குறிப்புகள் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினால் தேசிய மற்றும் உலக அளவிலுள்ள ஊடகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சென்று சேரும் என்பதற்காக சில குறிப்புகளை ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறேன் என நிதியமைச்சர் தகவல்.
  • பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க, புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு. சென்னை வெஸ்லி தேவாலயம், நெல்லை கால்டுவெல் தேவாலயம், சென்னை நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி மற்றும் நாகூர் தர்கா ஆகியவை புனரமைக்கப்படும்.
  • மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான தகுதியான பயனாளர்களை கண்டறியும் பணிகள் முழு மூச்சாக நடந்துவருகின்றன. மாநில நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் போது இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20,400 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு.
  • காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடைய தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர் தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். ரூ.100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
  • ஆய்வுகளின்படி, மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை, தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர் நிலை அமைப்பாக மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • தொன்மையான கோயில்களை சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
  • இந்து சமய அறநிலையத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.340.87 கோடி ஒதுக்கீடு.
  • சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.911 கோடிநிதி ஒதுக்கீடு.
  • புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம் ரூ.50,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும். செய்யாறு & கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன மையம்.
  • புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நடமாடும் உதவி மையம் அமைக்கப்படும்.
  • தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு.
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் ( TANGEDCO ) 13000 கோடி இழப்பை அரசே ஏற்கிறது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு.
  • மின்கட்டண மானியமாக ரூ.9,379 கோடியை அரசு வழங்கும்.
  • சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
  • துறைமுக சாலை திட்டம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5,770 கோடி ஒதுக்கீடு.
  • நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,737 கோடி ஒதுக்கீடு.
  • ஏழை மக்களுக்கான வீடுகளை கட்ட ரூ.2,030 கோடி ஒதுக்கீடு
  • மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு மானியமாக ரூ.1,520 கோடி ஒதுக்கீடு. இலவச பேருந்து திட்டத்தால் மகளிர் பயணிகளின் பங்கு 40%ல் இருந்து 61% ஆக அதிகரிப்பு. 2,213 பிஎஸ் 6 புதிய பேருந்துகள் போக்குவரத்துத்துறைக்கு கொள்முதல் செய்யப்படும்.
  • 6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் போன்ற பழங்குடி தமிழர்களுக்கு ரூ.20.7 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்ட அரசு அனுமதி.
  • உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படிப்பைத் தொடர தேவையான உதவிகளை அரசு வழங்கும்.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.5.6 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையை போல புத்தக கண்காட்சி. தமிழர்களின் மரபை கொண்டாடக் கூடிய வகையில் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.
  • புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் மத்திய நூலகங்கள் அமைக்கப்படும்.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவ திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு.
  • சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கு ரூ.849 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு.
  • 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ரூ.1019 கோடி செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு. வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
  • 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்காக ரூ.204 கோடி ஒதுக்கீடு. ரூ.1,000 கோடி செலவில் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.IIT, IIM-களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும்.
  • உயர்கல்வித்துறைக்கு 5,668.89 கோடி ஒதுக்கீடு.
  • இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.
  • அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிப்பு. அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு.
  • அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்.
  • காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வட சென்னையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வளாகத்தை அரசு உருவாக்கும்.
  • பெரியாரின் சிந்தனைகள், 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்.
  • வனத்துறை பரப்பளவை அதிகரிக்க வன ஆணையம் அமைக்கப்படும் .
  • இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது, அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி; ஆண்டுக்கு 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.
  • அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
  • குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல், வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
  • சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு.
  • நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
  • அணைகளை புனரமைக்க ரூ.1,064 கோடி ஒதுக்கீடு.
  • பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.7338 கோடி ஒதுக்கீடு. கடந்தாண்டை காட்டிலும் ரூ.4296.35 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு.
  • நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுகீடு.
  • வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • சென்னைக்கு அருகே ரூ.200 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும், தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற அமைப்பை அரசு உருவாக்கும்.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு.
  • போதை பொருட்களை ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
  • சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்.
  • கொற்கையில் ரூ.5 கோடி செலவில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு.
  • தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும். தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு.
  • விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலை நாட்டுவதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.
  • அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்.
  • தமிழ் மற்றும் இந்தோ – ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும். தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.
  • ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் முதலமைச்சர் கேட்டிருக்கிறார் என நிதியமைச்சர் தகவல்.
  • மத்திய அரசின் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படும் – பட்ஜெட் உரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் தகவல்.
  • சமூகத்தின் அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சமூக நல திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
  • கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க எடுக்கப்படும் தொடர் முயற்சிகள் வருத்தமளிக்கிறது. மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்.
  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம்.
  • 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது. அதாவது 4.16% ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை 3.08% ஆக குறைகிறது.
  • 2014 முதல் அச்சுறுத்தி வந்த வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது.
  • அரசின் முயற்சிகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் நிதிநிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
  • நிதிநிலை அறிக்கை உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
  • அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, கைது உள்ளிட்டவை குறித்து பேச அனுமதிக்காததால் சட்டப்பேரவையில் அதிமுக அமளி.
  • எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
  • தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • காகிதமில்லா பட்ஜெட்டாக இந்த வரவுசெலவு திட்டத்தை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாசித்து வருகிறார்.
  • தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
  • 2022-23-ஆம் ஆண்டு நிதியாண்டின் பட்ஜெட் தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்