பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பளிக்க வேண்டும்! – மநீம
பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் பட்டியலின பெண் ஊராட்சித் தலைவர் ஒருவர் தேசியக்கொடியேற்ற பாதுகாப்பு கோரி காவல்துறைக்குக் கடிதம் எழுதிய விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜி, டிஎஸ்பி-க்கு எழுதிய கடிதத்தில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஊராட்சித் தலைவரான தான், தீண்டாமை காரணமாக கடந்த குடியரசு தினத்தன்று அரசுப்பள்ளியில் கொடியேற்றவிடாமல் தடுக்கப்பட்டதாகவும்; நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின்போது அரசுப்பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற அனுமதியளித்துப் பாதுகாப்பும் வழங்கிடவேண்டும் என்று கோரியுள்ளார்.
சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக் கொடியேற்ற விடாமல் தடுப்பது வேதனைக்குரியது. பட்டியலின சமூகத்தில் பிறந்ததற்காக தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கும் அவலம் நீடிப்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல.
சமூகத்தில் அனைத்துத் தரப்பினரின் கைகளுக்கும் அதிகாரத்தைக் கொண்டுசேர்த்து “சமூக நீதியைக்” காத்திடுவது என்பது உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்ட நோக்கங்களில் ஒன்றாகும். எடுத்தவாய்நத்தம் நிகழ்வானது அந்த அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜி அவர்கள் பள்ளியிலோ அல்லது மாற்று இடத்திலோ கொடியேற்ற வழிவகை செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது. ஆகஸ்ட்-15 அன்று நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களிலும் இதுபோன்ற சமூக அநீதிகள் நிகழலாம்.
ஆகவே, சமூகநீதியை குலைப்போர் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் உத்தரவிடவேண்டும். அரசின் நடவடிக்கைகளைத் தாண்டி, மக்களிடமும் மனமாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். “தீண்டாமை மனிதநேயமற்ற செயலும், பெருங்குற்றமும் ஆகும்” என்று பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள வரிகள் காவல்துறையால் நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதைவிட மக்களின் மனமாற்றத்தின் மூலம் நிகழவேண்டும். இதுவே “சமூகநீதியை” உறுதிப்படுத்த நிரந்தரத் தீர்வாக அமையும்.’ என தெரிவித்துள்ளார்.
பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பளிக்க வேண்டும்!
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் – @sentharu அறிக்கை.#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNM4SocialJustice #MNM4Women #MNM4HumanRights #MNMPressRelease#MNMTN #MNMKH
(11-08-2022) pic.twitter.com/VycEGhkolB
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 11, 2022