பட்டியல் சமூகத்தினருக்கு துணைவேந்தர் பதவி வழங்கப்பட வேண்டும் – திருமாவளவன்
ஆளுநரிடம் பட்டியல் சமூகத்தினருக்கு துணைவேந்தர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், துணை வேந்தர் பதவிக்கு பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களும் விண்ணப்பித்துள்ளார்கள். எனவே பட்டியல் சமூகத்தினருக்கும் துணைவேந்தர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தோம்.
அதற்க்கு ஆளுநர் அவர்கள், இடஒதுக்கீடு என்பது துணை வேந்தர் பதவியில் இல்லை. எனவே அதை அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்த முடியாத சூழல் உள்ளதாக கூறினார். சட்டம் இல்லாமல் இருக்கலாம், விதிமுறைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால், சமூக நீதியை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்பு மேதகு ஆளுநருக்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனவே உங்களை தேடி வந்திருக்கிறோம் என ஆளுநரிடம் முறையிட்டோம்.
தமிழக அரசு இதுபோன்ற பதவிகளில் இடஒதுக்கீடு வழங்க சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றினால், அதை ஏற்று, அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன். அது என்னால் முடியும் என ஆளுநர் கூறினார். ஆளுநர் அவர்களும், மாண்புமிகு முதல்வர் அவர்களும், நியமிக்கவிருக்கிற துணைவேந்தர் பதவிகளில் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களையும் நியமிப்பதற்கு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்றும், அதற்குரிய வழிவகைகளை காண வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.