இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வு!
தமிழ்நாட்டில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது. தமிழக அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்தது. அதன்படி, டாஸ்மாக் மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா, பீர் உள்ளிட்ட மதுவகைகளின் விலை விரைவில் உயர உள்ளதாக கூறப்பட்டது.
இதற்கேற்ப ஆப் பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்வதாக தகவல் வெளியான நிலையில், இன்று முதல் (பிப்ரவரி 1) மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது.
வணிக சிலிண்டர் விலை 12.50 ரூபாய் உயர்வு.!
மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு, அதன் அடிப்படையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி, 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்கலின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்று 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்களின் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, சாதாரண, நடுத்தர ரக மதுபானங்கள் குவார்ட்டருக்கு 10 ரூபாயும், ஆஃப்-க்கு 20ரூபாயும், புல் பாட்டில் 40 ரூபாயும் உயரும். இதே போல், உயர் ரக மதுபானங்கள் குவார்ட்டருக்கு 20 ரூபாயும், ஆஃப்க்கு 40-ரூபாயும், ஃபுல் பாட்டிலுக்கு 80 ரூபாயும் உயரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 650 மில்லி லிட்டர் அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி, 750 மி.லி, 1,000 மி.லி மதுபானங்கள் அந்தந்த ரகத்துக்கு ஏற்ப விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும். அதேபோல் 325 மி.லி, 500 மி.லி பீர் வகைகள் அந்தந்த அந்தந்த ரகத்துக்கு ஏற்ப விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படும் நிலையில், தற்போது இந்த விலை உயர்வு மதுப்பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.