முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் – விசிக தலைவர் கோரிக்கை..!
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரில் “மொழியியல் பல்கலைக்கழகம்” தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் ஆடம்பரமான நிகழ்வுகளை தவிர்த்து, தங்களது வீடுகளில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார்.
மேலும்,சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில்,முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரில் “மொழியியல் பல்கலைக்கழகம்” தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மொழியியல் பல்கலைக்கழகம்:
தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் “மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
மொழியியலுக்கென தனி பல்கலைக்கழகம்:
தமிழ்நாட்டில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஆனால், மொழியியலுக்கென தனியே பல்கலைக்கழகம் ஏதும் இல்லை. உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவான வகையில் தமிழ்நாட்டில் பொருத்தமானதொரு இடத்தில், கலைஞரின் பெயரில் அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.
முன்மாதிரி:
ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்திருக்கும் ‘மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகத்தை (Moscow State Linguistic University) முன்மாதிரியாகக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கலாம்.
கலைஞர் அவர்களின் மூன்றாவது நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.