ஆயுள் தண்டனை கைதிகள் – நீதியரசர் தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

Default Image

ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையை குறைத்து முன் விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு.

இதுகுறித்த அறிவிப்பில், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சிறையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்வது குறித்த முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க உரிய விரிவான வழிமுறைகள் வகுத்து அரசால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்தும், இதன்கீழ் பயன்பெற முடியாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் உள்ள உடல் நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள் மற்றும் மாற்றுத் திறனாளி சிறைவாசிகள்…

ஆகியோர்களின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டும், இது குறித்தான மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில்  இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க ஏதுவாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என். ஆதிநாதன் தலைமையின் கீழ் ஆறுபேர் அடங்கிய ஒரு குழு அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

இக்குழுவில், மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத் துறைத் தலைமை நன்னடத்தை அலுவலர், உளவியலாளர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்கறிஞர் என 5 உறுப்பினர்களும், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவி நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் உறுப்பினர் செயலராகவும் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்