வினாத்தாள் பரவிய விவகாரத்தில் தேர்வருக்கு வாழ்நாள் தடை..!
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் பரவிய விவகாரத்தில் தேர்வருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்த தேர்வுகள் 8.12.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 8.12.21 அன்றைய தேர்வு சார்பாக whatsappல் தகவல் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 8.12.2021 பிற்பகல் நடத்தப்பட்ட ஆங்கிலப் பாட வினாத்தாள் தேர்வு நேரம் பிப 2.00 மணி முதல் 5.00 மணி முடிந்த உடனேயே whatsappல் 5.13 மணிக்கு விடைகள் குறிப்பிட்டு வினாத்தாள் தேர்விற்கு முன்பே வெளிவந்ததாக audio messageல் தரப்பட்டுள்ளது.
இதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு மையத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் விளாத்தாள், ஒவ்வொரு தேர்வருக்கும் வினாக்களும், வினாக்களுக்கான விடைகளும் Randomize செய்யப்படுகிறது. ஒரு தேர்வருக்கு வழங்கப்படுவது போல பிரிதொரு தேர்வருக்கு இருக்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை. மேலும் இதில் மிகக் கடுமையான பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்படுகின்றன. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு rough sheet / வெள்ளைத் தாள் மற்றும் பேனா அல்லது பென்சில் வழங்கப்படுவது நடைமுறையாகும்.
பூர்ணிமா தேவி, நாமக்கல் என்ற தேர்வர் இத்தாளினை பயன்படுத்தி கேள்வித் தாளில் உள்ள கேள்விகளை எழுதி அதனை மையத்தில் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்று Whatsappல் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. Whatsappல் பெறப்பட்ட கையினால் எழுதப்பட்ட 8 பக்கங்களில் உள்ள வினாக்களின் வரிசை எண் வினாக்கள் மற்றும் விடைகளும் (options) தேர்வருக்கு தேர்வின் போது கணினியில் வழங்கப்பட்ட வினாத்தாளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் அனைத்து வினாக்களும் ஒன்றாக உள்ளளன.
விடைகளும் வரிசை மாறாமல் அப்படியே உள்ளது. ஒவ்வொரு தேர்வருக்கும் தளித்தனி வினாக்கள் வழங்கும் நிலையில் இத்தேர்வருக்கு வழங்கப்பட்ட வினாக்களை மையத்தில் பெற்ற கூடுதல் வெள்ளைத் தாள்களில் எழுதி எடுத்துச் சென்று தேர்விற்கு பிறகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாக இதன் மூலம் அறிய முடிகிறது. கேள்வித்தாள் தேர்விற்கு முன்பே வெளியாகவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விதிகளை மீறிய குற்றத்திற்காக மேற்கண்ட தேர்வர் மீது வாழ்நாள் தடை நடவடிக்கையும் தவறான தகவல்களை பரப்பியவர் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கையும் அவதூறு வழக்கு நடவடிக்கையும் எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.