ஜனாதிபதிக்கு கடிதம்… முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்!

Edappadi Palanisamy

தன் குடும்பம் மீதும், சக அமைச்சர்கள் மீதும் உள்ள குற்றசாட்டுகளை முதல்வர் மறக்க முயல்கிறார் என இபிஎஸ் கண்டனம்.

குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தன் குடும்பத்தின் மீதும், சக அமைச்சர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்க, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தானே நீதிபதியாகி முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என்று குறிப்பிட்ட முதலமைச்சருக்கு கடும் கண்டனம்.

ஊழலின் ஊற்று கண்ணாக திமுகவினர் மற்றவர்களை பார்த்து ஊழல்வாதிகள் என குறிப்பிடுகின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து மீள மத்திய அரசிடம் சரணாகதி படலத்தை தொடங்கியுள்ளனர். எம்ஆர் விஜயபாஸ்கர், கேசி வீரமணி மீது பொய் வழக்கு போட்டுவிட்டு குற்றவாளி என கூறுகிறார் முதல்வர். ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு மண்டியிட்டு மடல் எழுதுவது பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. இவருடைய சட்டத் துறை மந்திரி ரகுபதி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், எங்கள் முன்னாள் அமைச்சர்கள் பற்றி குறிப்பிட்டதையே மீண்டும் தன் கடிதத்தில் ஸ்டாலின் வாந்தி எடுத்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மெகா ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தனது குடும்பத்தையும், அரசையும் காப்பாற்றிக்கொள்ள, விதிவசத்தால் முதலமைச்சரான ஸ்டாலின், கடப்பாரையை விழுங்கி, சுக்கு கஷாயம் குடித்து ஏப்பம் விட்டுவிடலாம் என்று நினைக்கிறார். காற்றடித்த பலூனை எவ்வளவுதான் தண்ணீருக்குள் அழுத்தினாலும் அது மேலே வந்தே தீரும். எங்களுக்கு நீதியின்பால் நம்பிக்கை உள்ளது. எங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது, திமுக அரசின் ஏவல் துறை மூலம் புனையப்பட்ட வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படவே இல்லை.

அதற்குள் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ள திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும் முன் நீங்களும், உங்கள் சகாக்களும் உத்தமர்களா? என்று சிந்திக்கவும். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்” என்பது போல், அம்மாவின் ஆட்சி மீண்டும் அமையும்போது, உங்கள் அனைவருடைய வழக்குகளும் மீண்டும் திறக்கப்பட்டு, மேல் விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்தின் முன் நிற்கும் காலம் விரைவில் வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்