“கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்”… அமைச்சர் ரகுபதி பேச்சு!
தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா எனும் இஸ்லாமிய வழிபாட்டு தலமும் உள்ளது. இதில் சிக்கந்தர் பாதுஷா தர்காவில், ஜனவரி 18 அன்று ஆடு, கோழி பலியுடன் கந்தூரி நிகழ்வு நடைபெறவிருந்தது. ஆனால், திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழிகளை பலியிட அனுமதிஇல்லை என மதுரை மாவட்ட காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
ஆடு கோழிகளை பலியிட கூடாது என இந்து அமைப்பினரும் போர்க்கொடி தூக்கிய காரணத்தால் இஸ்லாமிய அமைப்புகள் இந்த கந்தூரி நிகழ்வு எப்போதும் நடப்பது தான் என வாதம் செய்து வந்தனர். இதன் காரணமாக, திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.முதலில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு மாலை 5 – 6 மணி வரை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனவும், பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவித்திருந்தது.
உத்தரவின்படி, பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வரும் நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என சிலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் அப்படி நினைப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது தமிழ்நாட்டில் அது நிச்சியமாக நடக்காது என்பது தான். ஏனென்றால்ம் தமிழ்நாடு இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற ஒரு மாநிலம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு வரும் என நாங்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறோம். அரசும் கண்டிப்பாக அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபம் அடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை நிச்சயம் ஒடுக்குவோம்” எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.