மனித வெடிகுண்டாக உள்நுழைவோம்., கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, தினகரன் – சிவி சண்முகம் பேட்டி

Default Image

சசிகலா மீது மீண்டும் டிஜிபியிடம் புகார் அளித்த பிறகு, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் ஆகியோர் பேட்டி.

சென்னையில் டி.ஜி.பி. திரிபாதி அலுவகத்திற்கு சென்ற, அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டவர்கள் சசிகலா மீது மீண்டும் புகார் அளித்துள்ளனர். சசிகலா பெங்களூரில் இருந்து வரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என ஏற்கனவே, புகார் கொடுக்கப்பட்ட நிலையில, இன்று மீண்டும் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் மற்றும் அவை தலைவர் மதுசூதன் ஆகியோர் சசிகலா மீது டிஜிபியிடம் புகாரளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளனர். அப்போது, சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், நீங்கள் டிஜிபியிடம் மனு கொடுத்தாலும் சரி, முப்படை தளபதிகளிடம் மனு கொடுத்தாலும் சரி, எங்களை தடுக்க முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நேற்று பெங்களூரில் பேட்டியளித்த தினகரன், சசிகலா அவர்களுடைய ஆட்கள், நாங்கள் 100 பேர் மனித வெடிகுண்டாக மாறி தமிழகத்திற்கு வருவோம் என மிகப்பெரிய அச்சுறுத்தலையும், கொலை மிரட்டலையும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கூறியுள்ளனர். மேலும் பொதுமக்கள் உயிருக்கும், சொத்துக்கும் இரு தரப்பு மக்களிடையே விரோதத்தை உருவாக்கி, கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களை சார்ந்து இருப்பவர்கள் ஒரு சதித்திட்டத்தை தீட்டி வருகிறார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகத்தான், நேற்று தினகரன் இப்படி பேட்டியளித்துள்ளார் என்றும் அவரை சேர்ந்தவர்கள் மனித வெடி குண்டாக மாறி தமிழகத்தில் நுழைவோம் எனவும் கூறியுள்ளனர் என டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். ஏற்கனவே, இரு தினங்களுக்கு முன்பு அதிமுக என்பது உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில், தற்போது உள்ள முதல்வர், துணை முதல்வர் மற்றும் அவை தலைவர் மதுசூதன் தலைமையில் இருப்பவர்கள் தான் அதிமுக. இரட்டை இலை சின்னம் அவர்களுக்குத்தான் என்று சசிகலா, தினகரன் தொடர்ந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது என தெரிவித்திருந்தோம்.

அதன்படிதான், இந்த 4 ஆண்டு காலம் ஜெயலலிதா அம்மாவின் வழியில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில், அதிமுக அரசு அமைதியாக, சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் தலைமையில் நாடாளுமன்றம், உள்ளாட்சி மற்றும் இடைத் தேர்தலையும் சந்தித்துள்ளது. இதுதான் இறுதி தீர்ப்பு, முடிந்த கதை. ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் இருந்து வந்து, நான் தான் அதிமுக என்று கூறிக்கொண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் கலவரத்தை தூண்டு வகையில், சசிகலா, தினகரன் செயல்படுகிறார்கள். இந்த பழியை அதிமுக மீது போட திட்டமிட்டு உள்ளார்கள். ஆகவே, அந்த திட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக தான், இந்த சதி திட்டத்திற்கும் அதிமுகவுக்கும் எந்தவித சம்மந்தம் இல்லை. மேலும் அதிமுக கொடி மற்றும் பெயரை பயன்படுத்தி, தவறாக இந்த கலவரத்தை தூண்ட இருக்கின்ற சசிகலா, தினகரன் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளும் கட்சி, எதிர் கட்சி, அம்பானி பிரதமர், முதல்வர், சாதாரண வார்டு கவுசிலர் யாராக இருந்தாலும் சரி, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், சட்டப்படி யாரிடம் மனு கொடுக்க வேண்டுமோ, அவர்களிடம் கொடுத்துதான் ஆக வேண்டும். நேரடியாக யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. இரு தினங்களுக்கு முன்பு சசிகலா, நான் தான் அதிமுக, கொடியை பயன்படுத்த எனக்கு உரிமை இருக்கும் என்று மனு  கொடுத்துள்ளார். அந்த உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டது என செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்