“சமத்துவம், சமஉரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” – தவெக தலைவர் விஜய்.!
பெரியார் பிறந்தநாளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். சாதி, மத ஆதிக்கம், மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர் பெரியார் என்று நினைவுகூர்ந்தார்.
பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ் என்று போற்றப்பட்ட அவரது பிறந்தநாளில், சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக விஜய் தனது அறிக்கையில், ” சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.
சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி. பெண்கள் பாதுகாப்பு. சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) September 17, 2024
முன்னதாக, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல், ஓணம் பண்டிகைக்கு மட்டும் விஜய் வாழ்த்து தெரிவித்ததால், சமூக வலைதங்களில் பேசும்பொருளாக மாறியது. இதனிடையே, அண்ணா பிறந்த நாளை தொடர்ந்து, பெரியார் பிறந்த நாளுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால், அவர் திராவிட அரசியலை பின்பற்றுவதாக விமர்சனங்கள் எழுதுள்ளது. .