கோமியத்தை குடிப்பவர்கள் குடித்துக் கொள்ளட்டும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்!
கோமியம் குடிப்பது குறித்த சர்ச்சைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருவள்ளூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பதில் அளித்துள்ளார்.
திருவள்ளூர் : கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும், கோமியத்திற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாக ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதனைத்தொடர்ந்து, முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது “மாட்டு கோமியத்தில் ஆயுர்வேதம், ஆராய்ச்சி பூர்வமாக மைரோ ஆர்க்னிசத்தை காப்பாற்றும் சக்தி உள்ளது என கண்டுபிடித்து உள்ளனர். மாட்டு சாணத்தை பயன்படுத்துவார்கள், மாட்டுக்கறியைச் சாப்பிடுவார்கள், மாட்டின் கோமியம் மருந்து என்று சொன்னால் எதிர்க்கிறார்கள் ஆயுர்வேதத்தில் மருத்துவமாக கோமியத்தை பயன்படுத்தக் கூடாது என கூறுகிறார்கள். 80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்து” எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கோமியம் குடிப்பது காய்ச்சல் சரியாக்கும் என காமகோடி, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பேசியது குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் ” சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஒரு சோதனையில் மாட்டு கோமியத்தில் பாக்டீரியா இருக்கிறது என தெரியவந்தது. எனவே கோமியத்தை உங்களுக்கு குடிக்கவேண்டும் என்று எண்ணம் வந்தால் நீங்கள் தாராளமாக குடித்து கொள்ளுங்கள். கோமியத்தை குடிப்பவர்கள் குடித்துக் கொள்ளட்டும். ஆனால், அதனை மற்றவர்களும் குடிக்கவேண்டும் என்று சொல்லி பரப்பிவிட்டு இருக்கவேண்டாம்” என ஜெயக்குமார் கூறியுள்ளார்.