இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும் – அன்புமணி ராமதாஸ்

Default Image

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்திருப்பது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். 

தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இதனை தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பப்பட்ட நிலையில், விளக்கம் கேட்டு ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார்.

கடந்த மார்ச் மாதம் இரண்டாவது முறையாக ஆன்லைன் தடை சட்டமசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்த நிலையில், ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் ட்வீட்

இதற்க்கு வரவேற்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்திருப்பது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது : இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஆளுனர் ஆர்.என். இரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆளுனரின் முடிவு மிகவும் தாமதமானது என்றாலும் கூட, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? என்பதையே ஆளுனர் மீண்டும், மீண்டும் வினாவாக எழுப்பி வந்தார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பா.ம.க.வின் நிலைப்பாடு தான் வெற்றி பெற்றிருக்கிறது!

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுனர் செய்த தாமதம் ஏற்க முடியாதது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளித்திருந்தால் அதன் பின் நிகழ்ந்த 21 தற்கொலைகளை தவிர்த்திருந்திருக்க முடியும்.

மீண்டும் ஒரு சட்டம் இயற்றும் தேவையும் இருந்திருக்காது! தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. இப்போது ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருப்பது பா.ம.கவிற்கு கிடைத்த வெற்றி. தற்கொலைகள் இனி நிகழாது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும். நீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட வாய்ப்புள்ள வழக்குகளை சட்ட வல்லுனர்களைக் கொண்டு முறியடிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்