கொங்கின் சங்கநாதம் கோட்டையில் முழங்கட்டும்., வெற்றி நமதே – வேட்புமனு தாக்கல் செய்த கமல்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. கடந்த 12ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இன்று மதியம் சேலம் மாவட்டம் எடப்பாடியில் 7வது முறையாக முதல்வர் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை கொளத்தூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிட எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், கோவை தெற்கில் காங்கிரஸ், பாஜகவை எதிர்த்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் எனது பழைய நினைவுகள் அதிகம். நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், எனக்கு மிகவும் பிடித்த ஊர் என கூறியுள்ளார்.
மத நல்லிணக்கம் இல்லாமல் ஆக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை முழுமையாக முறியடிக்க வேண்டும். மீண்டும் கோவையை சீரமைத்து கொண்டு வர வேண்டும். இதனால் இங்கு போட்டியிட முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். மே 2ம் தேதிக்கு பின்னர் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்க செல்வார் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தபின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருவெற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், திருச்செங்கோடு தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கோவில்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மக்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி வேட்பு மனு தாக்கல் இனிதே நிகழ்ந்தது. கொங்கின் சங்கநாதம் கோட்டையில் முழங்கட்டும். வெற்றி நமதே! pic.twitter.com/YGokrvXsVT
— Kamal Haasan (@ikamalhaasan) March 15, 2021