ஓபிஎஸ்-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.. ஜெயக்குமார் திட்டவட்டம்!
ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை, அவர் கடை நடத்துகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது, அதிமுக – பாஜக இடையே மோதல், கட்சி வளர்ச்சி பணிகள், இடைத்தேர்தல் தோல்வி மற்றும் ஓபிஎஸ் விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
ஓபிஎஸ்க்கு எதிராக நடவடிக்கை:
மாவட்ட செயலாளர்களுடனான நடந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக – அதிமுக இடையே மோதல் இல்லை என்றும் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது எனவும் தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல்பாடு:
அதிமுக கொடி, லெட்டர்பேடை ஓபிஎஸ் பயன்படுத்துவது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை, அவர் கடை நடத்துகிறார். இதனால் தான் அங்கு ஒருவரை நீக்குவது சேர்ப்பது என்பது நடந்து வருகிறது. ஓபிஎஸ் அதிமுக லெட்டர் பேட், சீல் ஆகியவற்றை பயன்படுத்துவது பற்றி செய்தியாளரை கேட்டதற்கு, ஓபிஎஸ் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்றார்.
இவர்களை தவிர, மற்றவர்கள்:
எனவே, விரைவில் இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்பு சொன்னது போல ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய இந்த மூன்று வகையறாக்களை தவிர, வேறு யார் வந்தாலும் சகோதர மனப்பான்மையுடன் நாங்கள் அதிமுகவில் ஏற்றுக் கொள்வோம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.