மீண்டும் இப்படி நடந்தால் முதல்வர் பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை – ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
முக ஸ்டாலின் குறித்து பொய்யாக பேசிய முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று முன்தினம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பேசும்போது, உண்மை பேசுவதற்கு பதிலாக ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில நினைவிடம் கட்டக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் முக ஸ்டாலின் மீது பொய்யாக பேசிருக்கிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றசாட்டியுள்ளார்.
ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டவர் எங்கள் தலைவர் முக ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பினை அறிவித்தபோது கூட எங்கள் தலைவர் ஸ்டாலினும், திமுகவினரும் எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை, அதுவே உண்மை. நினைவிடம் கட்டக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்கள், தற்போது அவர்கள் கூட்டணியில் இருக்கும் பாமக என்பதை ஏனோ பழனிசாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல பேசியிருக்கிறார்.
இது ஜெயலலிதாவுக்கு செய்கின்ற பச்சை துரோகம். 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இவர், அப்போது பேசாமல், தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொடர்ந்து பொய் பிரச்சாரங்கள் நடத்தி வருவதில் இதுவும் ஒன்றாகும். எனவே, முதல்வர் பழனிசாமியின் இந்த போக்கிற்கு மிகவும் கண்டனத்துக்குரியது. இதுபோன்று மீண்டும் பொய்களை பேசினால், இவர் மீது சட்டப்படி நடவடிக்கையை திமுக எடுக்கும் என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், நினைவிடம் திறப்பு விழாவிற்கு அழைத்துவரப்பட்ட கூட்டத்தினர், கலைஞர் நினைவிடத்தில் கூடியது, தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி பொய்யாக பேசி வருகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.