நாதகவில் விலகல்.. அடுத்தது தவெகவா? திமுகவா? காளியம்மாள் சொன்ன பதில்!
காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு காளியம்மாள் விளக்கம் கொடுத்து பேசியிருக்கிறார்.

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் தான் கட்சியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அவர் கட்சியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக அண்மையில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட காளியம்மாளின் பெயரானது சமூக செயற்பாட்டாளர் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது தான் அவர் விலகவுள்ள தகவலும் உறுதியானது.
அதன்பிறகு அவரும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு ” இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தங்களையும் பகிர்ந்துக்கொள்கிறேன்!. கட்சியில் இருந்து விலகுகிறேன்” என அறிவித்தார்.
நாதகவில் இருந்து விலகியதை தொடர்ந்து அடுத்ததாக காளியம்மாள் எந்த கட்சியில் இணையப்போகிறார் என்கிற கேள்விகளும் எழும்பி வருகிறது. ஒரு பக்கம் அவர் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அறிக்கையில், என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்.” எனகுறிப்பிட்டிருந்தார். முன்னதாக தமிழ் தேசியமும், திராவிடமும் தான் தனது இரு கண்கள் என தனது கொள்கைகளை விளக்கியவர் தவெக தலைவர் விஜய்.
எனவே, அறிக்கையில் காளியம்மாள் அப்படி குறிப்பிட்டு இருந்த காரணத்தால் அவர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து. ராமேஸ்வரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாளிடம் அடுத்தது தவெகவா? திமுகவா?என்ற கேள்வியை கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் ” இப்போது அப்படி எந்த திட்டமும் இல்லை..முதலில் நான் இந்த விஷயத்தை பார்த்து சிந்திக்கவேண்டும்…ஆனால், அந்த முடிவு என்னை சார்ந்த முடிவாக இருக்காது என்னுடைய மக்கள் சார்ந்ததாக இருக்கும். மக்கள் என்ன யோசிக்கிறார்களோ அந்த அடிப்படையில் என்னுடைய முடிவு இருக்கும்” எனவும் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.