“எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள்”- அன்புமணிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்..!

Default Image

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் இயக்குனர் பாரதிராஜா அவர்கள், அன்புமணி ராமதாசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து பா.ம.க இளைஞரணிச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள்  அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  அந்த அறிக்கையில், ஜெய் பீம் திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும்கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும்கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன்கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்றிருப்பது, உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரைக் கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்தப் பாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குருவை நினைவுபடுத்தும் வகையில் `குரு’ என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தமிழ்நாட்டில் வாழும் மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை’ என தெரிவித்திருந்தார்.

அன்புமணி அவர்களின் இந்த அறிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் இயக்குனர் பாரதிராஜா அவர்கள், அன்புமணி ராமதாசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும் அவர் மீதான வன்மத்தையும் வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும்.

சினிமாவை விட இங்கு கவளம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே. நடுவண் அரசு மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும்.

எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள் யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை.

நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்?

ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை. எதுவாக இருந்தாலும் எங்களோடு பேசுங்கள் சரியென்றால் சரி செய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம் நன்றி!’ என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்