கடந்த 1992 ஜூன் மாதம் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரின் பெயரில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வாச்சாத்தி மலை கிராமத்தில் அங்குள்ள மக்களின் வீடுகளை சேதப்படுத்தி, அங்குள்ள பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் 1995ல் 269 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று, கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், அப்போது உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு , தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.
வாச்சாத்தியில் பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குற்றம் புரிந்தவர்களிடம் ரூ.5 லட்சம் வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் இளங்கோ உயர்நீதிமன்ற தீப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், 1992ஆம் ஆண்டு இந்த வழக்கை வெளிகொண்டுவருவதில் பெரும் சிக்கல் இருந்தது. இதனை நேரடி வழக்காக உயர்நீதிமன்றத்தில் கொண்டு செல்ல முடியாது. விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அப்போதே உயர்நீதிமன்ற பெண் நீதிபதி பத்மினி இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக மட்டுமே நாங்கள் தாக்கல் செய்தோம். இந்த வழக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநில செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான நல்லசிவன் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் ஹாதி , வழக்கின் தீவிரத்தை உணர்ந்து வழக்கை சிபிஐ உடனடியாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையில் பெரும் சிக்கல் நிலவியது. ஏனென்றால் இதில் 269 பேரை ஆஜர்படுத்தவே தனி கட்டடம் கட்டவேண்டி இருந்தது. சாட்சி கூற வருவோருக்கு நீதிமன்றத்தில் மனு அளித்து பயண பேட்டா வாங்கி கொடுத்தோம். அடையாளம் காண்பதற்கு குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை 6 பேருடன் நிற்க வைத்து அடையாளம் காணப்பட வைக்க வேண்டும். அப்படி பார்த்தல் 269 பேரில் ஒவ்வொருவருக்கும் 6 பேர் என்றால் பெரிய கூட்டத்தை சமாளிக்க வேண்டி இருந்தது. முதலில் வேலூர் சிறையில் இந்த அடையாள சோதனை நடைபெற்று அங்கு கலவரமாக மாறி, அதன் பின்னர் பாதிக்கப்பட்ட 18 பெண்கள் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர் என்று வழக்கறிஞர் இளங்கோ குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் விசாரணை எல்லாம் முடிந்து 19 ஆண்டுகள் கழித்து 29.09.2011 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு இதே தீர்ப்பை இன்று நீதிபதி வேல்முருகன் உறுதிப்படுத்தியுள்ளார். வாச்சாத்தி கிராமம் மலை கிராமமே அல்ல. அது மலை அடிவாரத்தில் உள்ள கிராமம். அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் , வாச்சாத்தி கிராமம் மலை கிராமம், மலையேறி சென்று இருக்க முடியாது. இந்த சம்பவம் நடக்கவே இல்லை என மறுத்தார் என வழக்கறிஞர் இளங்கோ குறிப்பிட்டார்.
அதன் பிறகு அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ டெல்லி பாபு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.சண்முகம் ஆகியோர் முயற்சியால் இந்த கொடூர சம்பவம் வெளியில் தெரியவந்தது. அதனை அடுத்து ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழு அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த விசாரணை குழு அறிக்கையில், சம்பவத்தின் போது அரசு அதிகாரிகள் வாச்சாத்தி கிராமத்திற்கு சென்று சோதனை செய்து அங்குள்ள மக்கள் வீடுகளை சேதப்படுத்தி உள்ளனர். ரேஷன் கடையை சூறையாடியுள்ளனர். ஆடு, கோழி ஆகிய்வற்றை வெட்டியுள்ளனர். அதனை 3 நாள் அங்கு தங்கி இருந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதற்கான தடையம் எல்லாம் அங்கு இருந்தது. நெல் வயல்களின் மீது மண்ணெண்ணெய் கொண்டு சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் பயந்து ஒரு மாத காலம் மலைக்குள் ஒளிந்து கொண்டனர் என்றும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நடந்த விசாரணை குழு அறிக்கையில் குறிப்பிடபட்டு, நீதிபதி பக்தவச்சலம் முன் சமர்ப்பிக்கப்பட்டது என வழக்கறிஞர் இளங்கோ கூறினார்.
மேலும், இந்த சம்பவங்கள் நடந்த பிறகு மலைவாழ் மக்கள் மீது தான் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை நீதிமன்றத்தில் குறிப்பிட்டு பின்னர் மலைவாழ் மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் நீக்கப்பட்டது. மலைவாழ் மக்கள் மீது பதியப்பட்ட வழக்கின் கீழ் விசாரணையானது வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு நடைப்பெற்றது.
ஊர் பெரியவர் , ஊரில் உள்ள பெண்கள் என அனைவரும் நிர்வாணப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதிகாரிகள் சாப்பிட்ட மீத சாப்பாட்டில், எச்சில் உமிழ்ந்து தான் கிராம மக்களுக்கு உணவாக கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் புத்தகங்களாகவும், திரைப்படமாகவும் (விடுதலை) வந்துவிட்டது எனவும் வாச்சாத்தி கிராம மக்கள் அனுபவித்த கொடுமைகளை வழக்கறிஞர் இளங்கோ இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…