லட்டு சர்ச்சை : “பரிதாபங்கள்” யூடியூப் சேனல் மீது தமிழ்நாடு பாஜக புகார்!
"லட்டு பாவங்கள்" என்ற பெயரில் வெளியான வீடியோவை நீக்கியிருந்தாலும், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துவிட்டதாகக் கூறி பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திரா டிஜிபியிடம் தமிழ்நாடு பாஜக தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். அதனைத்தொடர்ந்து, உணவுப்பொருள் ஆய்வுக்குழு ஆய்வு செய்ததில் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததை உறுதிப்படுத்தியது.
சிக்கிய பரிதாபங்கள் சேனல்
இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதனை ட்ரோல் செய்யும் விதமாக யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் தங்களுடைய பரிதாபங்கள் சேனலில் “லட்டு பாவங்கள்” எனக் கலாய்த்து வீடியோ வெளியீட்டு இருந்தார்கள். வீடியோ வெளியான சில நேரங்களில், அவர்களுக்கு எதிராக இந்துக்களை அவமரியாதை செய்வதாகக் கூறி எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது.
நீக்கம் & மன்னிப்பு
வீடியோ வெளியாகி எதிர்மறையான விமர்சனங்கள் பெருகிய காரணத்தால் உடனடியாக இதனைக் கவனித்த கோபி சுதாகர் அந்த வீடியோவை தங்களுடைய சேனலில் இருந்து நீக்கி விளக்கமும் கொடுத்தார்கள். பரிதாபங்கள் சேனல் தரப்பிலிருந்து வந்த அறிக்கையில் ” கடைசியாகப் பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது.
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மணம் புண்பட்டிருப்பதால்.. அதற்கு வருத்தம் தெரிவித்துச் சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம்.. இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் கூறியிருந்தார்கள்.
புகார்
மன்னிப்பு கேட்டாலும் இந்த விவகாரம் அவர்களுக்குப் பெரிய எதிர்வினையாக அமைந்துள்ளது. ஏனென்றால், “லட்டு பாவங்கள்” என்ற பெயரில் வெளியான வீடியோவை நீக்கியிருந்தாலும், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துவிட்டதாகக் கூறி பாஜக தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு (BJP) விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் அமர் பிரசாத் ரெட்டி புகார் ஆந்திரப் பிரதேச காவல்துறையிடம் இந்த புகாரை அளித்துள்ளார். புகாரில் “சமீபத்தில், கோபி மற்றும் சுதாகர் வைத்துள்ள “பரிதாபங்கள்” என்ற யூடியூப் சேனல் “லட்டு பாவங்கள்” என்ற வீடியோவை வெளியிட்டது.
இந்த வீடியோவில், இந்து மத நம்பிக்கையையும் அதன் நடைமுறைகளையும் நேரடியாக அவமதிக்கும் வகையில், பல இழிவான மற்றும் எரிச்சலூட்டும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, “மாட்டிறைச்சி மற்றும் மீன் எண்ணெய்யுடன் திருப்பதி லட்டு மிகவும் சுவையாக இருக்கும்” என்று கூறுவது புண்படுத்துவது மட்டுமல்லாமல், மத முக்கியத்துவத்தையும் குறைக்கிறது
அந்த வீடியோவில் நமது மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்ரீ சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் ஸ்ரீ பவன் கல்யாண் ஆகியோரைக் குறிவைத்து அருவருப்பான வாசகங்களும் கருத்துகளும் உள்ளன. அவர்களின் இமேஜையும் நற்பெயரையும் களங்கப்படுத்துகிறது.
ஆந்திரப் பிரதேச காவல்துறை இந்த விஷயத்தை கவனித்தால் எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மத உணர்வுகளைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட இது போன்ற செயல்களை தடுக்கவும், மேலும் ஆத்திரமூட்டலைத் தடுக்கவும், கேலிக்கு அஞ்சாமல் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றும் தனிநபர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் விரைவான நடவடிக்கை அவசியம்” என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கோபி சுதாகர் மீது இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
Pursuant to the approval of BJP State Coordinator Thiru @HRajaBJP Avl., I have submitted a formal complaint to the DGP of Andhra Pradesh, seeking the registration of an FIR against the PARITHABANGAL YouTube Channel for their offensive video titled “Ladoo Pavangal.”
Even though… pic.twitter.com/9TJRNC39vf
— Amar Prasad Reddy (@amarprasadreddy) September 26, 2024