“பெரிய மாவட்டங்களை பிரிக்க இதனை அமைக்க வேண்டும்” – முதல்வருக்கு கடிதம் எழுதிய அன்புமணி ராமதாஸ்!

Default Image

அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கும்.எனவே,தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் அனைத்து மாவட்டங்களையும் மறுசீரமைக்க அரசு முன்வர வேண்டும் எனவும்,இதற்காக மாவட்ட மறுவரையறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்றும் கோரி முதல்வருக்கு,அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான நிர்வாகச் சிக்கல்களுக்கு காரணமாக இருக்கும் மாவட்ட எல்லைகளை சீரமைத்தல் மற்றும் பெரிய மாவட்டங்களை பிரித்தல் பணிகளுக்கு மாவட்ட மறுவரையறை ஆணையம் அமைக்கக் வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,அவர் வலியுறுத்தியுள்ளதாவது:

“தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றுதல்,மாவட்டங்களின் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மாவட்டங்களின் எல்லைகளை மறு வரையறை செய்தல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.

இந்தியாவில் பெரிய நிலப்பரப்புகளையும்,அதிக மக்கள்தொகையையும் கொண்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் சில மாவட்டங்களின் மக்கள்தொகை 40 லட்சத்திற்கும் கூடுதலாக இருந்தது.இது இந்தியாவின் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும்,உலகின் 101 நாடுகளையும் விட அதிக மக்கள்தொகை ஆகும்.இது சிறப்பான நிர்வாகத்திற்கு உதவி செய்யாது என்பதால் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களை பிரிக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதையேற்று கடந்த ஆட்சியில் காஞ்சிபுரம்,வேலூர்,விழுப்புரம், நாகப்பட்டினம்,திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்கள் 11 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.இது சிறந்த நிர்வாக மேம்பாட்டு நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.ஆனால்,இதில் நிகழ்ந்த சில தவறுகள் எல்லை மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

உதாரணமாக புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சில சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் சில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகள் சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் அடங்காமல்,அண்டை மாவட்டங்களிலும் பரந்து கிடக்கின்றன.அத்தகைய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்:

1. ஆலந்தூர் தொகுதி – சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள்,

2. காட்பாடி தொகுதி – வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள்,

3. திருக்கோவிலூர் தொகுதி – கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்,

4. உளுந்தூர்பேட்டை தொகுதி – கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்,

5.குன்னம் தொகுதி -பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள்,

6. அவினாசி தொகுதி -கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள்,

தமிழ்நாட்டில் இதே போல் இன்னும் பல சட்டப்பேரவைத் தொகுதிகளும் மாவட்ட எல்லைகளைக் கடந்து பரந்து விரிந்திருக்கின்றன.தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.3 கோடி வழங்கப்படுகிறது.அந்த நிதியை இரு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக செலவழிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.அதனால் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்,மொத்தம் 37.22 லட்சம் மக்கள்தொகை கொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு,செங்கல்பட்டு என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.மாவட்டங்கள் பிரிக்கப்படுவதன் நோக்கமே நிர்வாக வசதி தான்.ஒரு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படும் போது, அது கிட்டத்தட்ட சமமானதாக இருக்க வேண்டும்.அதன் மூலமே சமமான வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.ஆனால்,காஞ்சிபுரம் மாவட்டம் அவ்வாறு பிரிக்கப்படவில்லை.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் மக்கள்தொகை 37.22 லட்சம். சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 11 ஆகும்.இது முறையே 6 தொகுதிகள்,5 தொகுதிகள் கொண்ட மாவட்டமாக பிரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்,பல்லாவரம்,தாம்பரம்,சோழிங்கநல்லூர்,செய்யூர்,திருப்போரூர், செங்கல்பட்டு,மதுராந்தகம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் செங்கல்பட்டு மாவட்டமாகவும்,ஆலந்தூர்,திருப்பெரும்புதூர்,காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய 4 தொகுதிகள் காஞ்சிபுரம் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் 11.66 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய மாவட்டமாகவும்,செங்கல்பட்டு மாவட்டம் அதை விட இரு மடங்குக்கும் கூடுதலாக 25.56 லட்சம் மக்கள்தொகை கொண்ட பெரிய மாவட்டமாகவும் மாறியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகள் அதிக வருவாய் ஈட்டக்கூடியவை ஆகும்.ஆனால்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர்,திருப்பெரும்புதூர் ஆகிய இரு தொகுதிகள் மட்டும் தான் ஒப்பீட்டளவில் அதிக வருவாய் ஈட்டக்கூடியவை.இதனால் இரு மாவட்டங்களும் சம அளவில் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை;மாறாக பாகுபாடு தான் அதிகரிக்கும்.இது மக்களின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவி செய்யாது.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 25 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 8 ஆகும். மக்கள்தொகை அடிப்படையில்,இன்றைய நிலையில் தமிழ்நாட்டின் பெரிய மாவட்டம் திருவள்ளூர் ஆகும்.அதன் மக்கள்தொகை 37 லட்சம்.அடுத்து சேலம்,கோவை ஆகிய மாவட்டங்கள் தலா 35 லட்சம் மக்கள்தொகையுடன் அடுத்த இரு இடங்களை வகிக்கின்றன.இந்த மாவட்டங்கள் உலகிலுள்ள 103 நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்டவை ஆகும்.ஒரு நாட்டை விட ஒரு மாவட்டத்தின் மக்கள்தொகை அதிகமாக இருக்கும்போது,அந்த மாவட்டங்களில் சிறந்த நிர்வாகமும்,வளர்ச்சியும் சாத்தியமாகாது.

தமிழ்நாட்டில் திருவள்ளூர்,திருவண்ணாமலை,கடலூர்,சேலம்,கோவை, திருச்சி,தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.கும்பகோணம், விருத்தாசலம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் குறித்த கோரிக்கைகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என்று தாங்களும் உறுதியளித்திருக்கிறீர்கள்.

சிறியவையே வளர்ச்சி என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்குவது வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.இப்போது அதை விட இரு மடங்கு கூடுதலாக 38 மாவட்டங்கள் உள்ளன.அதன் காரணமாக கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.அதற்கான காரணங்களில் ஒன்று மாவட்டங்கள் சிறியவையாக இருப்பது தான்.

anbumani

இந்தியாவில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளவை பஞ்சாப்,ஹரியானா,தெலுங்கானா ஆகியவை. இவற்றில் பஞ்சாப்,ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் தலா 22 மாவட்டங்கள் உள்ளன.அவற்றின் சராசரி மக்கள்தொகை 12.60 லட்சம்.தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட போது அங்கு 10 மாவட்டங்கள் தான் இருந்தன. இப்போது 23 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு,மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.அந்த மாவட்டங்களின் சராசரி மக்கள்தொகை 11 லட்சம் மட்டும் தான்.

தமிழ்நாட்டிலும் இதே அளவு மக்கள்தொகை கொண்ட மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது மாவட்ட நிர்வாகம் மேம்படும்;உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.ஆனால், தமிழ்நாட்டில் 12 லட்சம் அல்லது அதற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 8 மட்டும் தான்.அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கும்.

எனவே,தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் அனைத்து மாவட்டங்களையும் மறுசீரமைக்க அரசு முன்வர வேண்டும். அவ்வாறு மாவட்ட எல்லைகள் மறுசீரமைக்கப்படும் போது,சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகள் மாவட்ட எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இதற்காக மாவட்ட மறுவரையறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்