“மக்களிடையே பக்தி குறைந்ததுதான் திடீர் மழைக்கு காரணம்”…மதுரை ஆதீனம் பேச்சு!
கோயில் இடங்களை வைத்திருப்பவர்கள் குத்தகை கொடுப்பதில்லை. அதனால்தான் பருவம் தவறி மழை பெய்கிறது என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மதுரை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் சென்னையில் பல இடங்களில் பெய்த கனமழை சென்னையையே புரட்டி போட்டது. தற்போது சென்னையில் மழை குறைந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது எனவும் இதுவரை இயல்பை விட 94% அதிக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், மக்களிடையே பக்தி குறைந்ததுதான் திடீர் மழைக்குக் காரணம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இன்று, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மதுரை ஆதினம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மரியாதை செய்து முடித்த பிறகு அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகள் கேட்டனர். குறிப்பாக, பருவம் தவறிய மழை பெய்து கொண்டு இருக்கிறது அதற்குக் காரணம் என்ன? எனச் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த மதுரை ஆதீனம் ” காரணம் என்னவென்பது உங்களுக்கே தெரியும்.” எனக் கூறினார். இருப்பினும் இந்த கேள்விக்கு உங்களுடைய பதில் என்ன எனச் செய்தியாளர்கள் விடாமல் கேட்டதால், அதற்கு ” மக்களிடையே பக்தி குறைந்தது தான் பருவம் தவறிய மழை பெய்யக் காரணம். கோவில் இடங்களை வைத்திருப்பவர்கள் குத்தகைக்குக் கொடுக்கவேண்டும்.
ஆனால், அதனைச் செய்ய மாட்டிக்கிறார்கள்” எனவும் வெளிப்படையாக மதுரை ஆதீனம் பதில் அளித்தார். பிறகு, நடிகர் விஜய் குறித்தான கேள்வியை எழுப்பியவுடன் அதற்குப் பதில் அளிக்க முடியாது என்கிற தோரணையில் மதுரை ஆதீனம் வேகமாக காருக்கு சென்றார்.