தமிழகத்தில் 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள்.! – எல்.முருகன்
ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட திருச்சி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை!
திருச்சி விமான நிலையம் திறந்து வைக்கபட்ட பின்னர் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், உலகளவில் இந்தியாவை 2047க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து வருகிறார் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டார் .
மேலும் , பிரதமர் ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் கோடி ரூபாயிலான நலதிட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இன்று மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. ஒரு ஆண்டில் மட்டும் 11 மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு தந்துள்ளது.
தமிழக ரயில்வே துறைக்கு 6000 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்துள்ளது. காசி தமிழ்ச்சங்கத்தை கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தியுள்ளார். நேற்று முன்தினம் வரையில் காசி தமிழ்ச்சங்கத்தை நிறைவு செய்துவிட்டு இங்கே வந்துள்ளார் பிரதமர் மோடி. காசிக்கும், தென்காசிக்கும் உள்ள தொடர்பு, காசிக்கும் சிவகாசிக்கும் உள்ள தொடர்பு என தமிழகத்திற்கும் காசிக்குமான தொடர்பை வலுப்படுத்தியவர். தமிழ் மொழியை , திருக்குறளை உலக அரங்கில் முன்னெடுத்து சென்றவர் பிரதமர் மோடி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்றைய விழாவில் பேசினார்.