மத்திய இணையமைச்சராக பதவியேற்ற எல்.முருகன்; ஒதுக்கப்பட்ட 3 துறைகள்….அவை என்னென்ன?
மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகன் அவர்களுக்கு 3 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.அவை என்னென்ன என்பது குறித்து காண்போம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக 2வது முறையாக கடந்த ஆட்சியைப் பிடித்த பிறகு,மத்திய அமைச்சரவை முதல் முறையாக நேற்று விவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,புதிய அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றனர்.அதில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றனர்.
இதனையடுத்து,தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவானது டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில்,மத்திய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றார்.அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர்கள் பலரும் மத்திய அமைச்சரான எல்.முருகன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர் எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்ட துறை:
மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகன் அவர்களுக்கு
- மீன்வளத்துறை,
- கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை,
- தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
3-வது தமிழர்:
தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும்,புதுச்சேரியின் துணை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டதையடுத்து எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.மேலும்,இவர் சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி,அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.இதில், 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.ஆனால், தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எல்.முருகன் அவர்கள் தோல்வியடைந்தார்.எனினும்,இந்த நிலையில்,அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது 3-வது தமிழராக எல்.முருகன் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.