“என்னை காப்பாத்துங்க.,” கதறிய காங்கிரஸ் மேயர்.! பரபரப்பான கும்பகோணம் மாமன்ற கூட்டம்!
கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் மேயர் சரவணனுக்கும் கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மேயருக்கு நெஞ்சுவலி எனக்கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் : கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் என்பவர் பொறுப்பில் உள்ளார். தமிழகத்தில் இருக்கும் ஒரே காங்கிரஸ் மேயர் இவர் தான். இவருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் (கவுன்சிலர்கள்) இடையே உரசல் போக்கு என்பது நேற்று உச்சம் தொட்டது என்றே கூற வேண்டும்.
நேற்று நடைபெற்ற கும்பகோணம் மாமன்ற கூட்ட முடிவில் கவுன்சிலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதை தொடர்ந்து மேயர் சரவணன் தனக்கு நெஞ்சுவலி எனக்கூறி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கும்பகோணம் கவுன்சிலர்கள், மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்ட 50 தீர்மானங்களுக்கு மேயர் கையெழுத்திட்டு இருப்பார். அந்த கோப்புகளை தற்போது காண்பிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து அந்த கோப்புகளை தான், நாளை காண்பிப்பதாகவும், இன்றுடன் கூட்டம் நிறைவடைந்தது என்றும் மேயர் சரவணன் கூறினார்.
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத கவுன்சிலர்கள், விடிய விடிய இங்கேயே இருக்கிறோம். கையெழுத்திட்ட 50 தீர்மானங்களுக்கான கோப்புகளை காண்பிக்க சொல்லி வலியுறுத்தினர். இதனை அடுத்து வேகமாக மாமன்ற ஓய்வு அறைக்கு மேயர் சரவணன் செல்ல முயன்றார். அப்போது திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி அறை வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து அங்கு மற்ற கவுன்சிலர்கள் கூடிவிட்டனர். அப்போது திடீரென தனக்கு நெஞ்சு வலிக்குது , என்னை காப்பாத்துங்க., என்னை காப்பாத்துங்க.. என்று கூச்சலிட்டபடி தரையில் படுத்து கொண்டார் . இதனை அடுத்து அவரை தூக்கி கொண்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பும், மேயர் சரவணனின் மருத்துவமனை அனுமதியும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.