3 நிற அட்டைகள் வழங்கி, மக்கள் நடமாட்டத்தை குறைக்க கும்பகோண அரசு புது முயற்சி!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல இடங்களிலும் அரசு தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் வருகிறது. இந்தியாவிலும் கடந்த 20 நாட்களாக இருந்த ஊரடங்கு மேலும் அதிகரிக்கப்பட்டு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளியில் வருபவர்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வரவேண்டாம் எனவும், சில அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மட்டுமே வரவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நேரங்கள் அடிப்படையில் மக்கள் வெளியில் வரலாம் என அரசாங்கம் கூறி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் பொதுமக்களின் அதிகப்படியான நடமாட்டத்தை குறைப்பதற்காக மூன்று நிற அட்டைகள் வழங்கி உள்ளனர். அதாவது பச்சை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் இவர்களுக்கு வார்டு அடிப்படையில் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
பச்சை நிற அட்டை கொண்டுள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், நீல நிற அட்டை கொண்டுள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், இளஞ்சிவப்பு நிற அட்டை கொண்டுள்ளவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெளியில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வெளியில் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த அட்டைகளுடன் வருபவர்கள் கையில் ஸ்மார்ட் கார்ட் அல்லது ஆதார் அட்டை ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும் எனவும் வீட்டிற்கு ஒரு நபர் தான் வெளியில் வர வேண்டும் எனவும் கும்பகோணத்தில் சட்டம் உள்ளது.