சானிடைசர் கொண்டு போலி மதுபானம் தயாரிப்பு ! அதிரடியாக 9 பேர் கைது
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் சானிடைசர் கொண்டு போலி மதுபான தயாரித்த 9 பேரை அதிரடியாக கைது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் அரசு மதுபானக் கடைகளை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அல்லாடிவந்த நிலையில் சிலர் அதனை பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே சட்ட விரோதமாக வீட்டிலேயே மது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த அகரம் ஊராட்சி இராமநாதன் குப்பத்தில் போலி மதுபானம் வீட்டிலேயே தயாரிக்கப்படுவது குறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் உத்திராபதி (33) என்ற நபரை வீட்டிலேயே வைத்து போலீசார் கைது செய்தனர், மேலும் அவர் மதுபான தயாரிப்புக்கு 400 லிட்டர் ஹான்ட் சானிடைசர் உபயோகப்படுத்தியது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடமலை (38), ராமலிங்கம் (65), மணிகண்டன் (24), தண்டபாணி (32), ரகுபதி (46), ஸ்ரீதர், முள்ளோடை அன்பு, ராஜேஷ்குமார் ஆகிய 9 நபர்களையும் கைது செய்து அவர்கள் மதுபானம் தயாரிக்க உபயோகப்படுத்திய இயந்திரம் மற்றும் ஸ்டிக்கர்கள், 2500 போலி மதுபானபாட்டில்கள், டாடா ஏஸ் வாகனம் போன்றவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மதுபான தயாரிப்புக்கு ஹான்ட் சானிடைசர் உபயோகப்படுத்தியதும் போலீசாரின் கைதும் குள்ளஞ்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.