நவம்பர் மாத இறுதிக்குள் குடமுழுக்கு – அமைச்சர் சேகர்பாபு!
நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.
சென்னை வடபழனி ஆதிமூல பெருமாள் கோயிலில் 8 லட்சம் ரூபாய் செலவில் பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான தற்காலிக அங்காடியை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திறந்து வைத்தார். இதன்பின் வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு குடமுழுக்கு பணிகளை ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் 40 கோடி ரூபாய் செலவில் வடபழனி கோயில் அர்ச்சக்கரர்களுக்கு வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலை மேம்படுத்த, வரவு திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விரைவில் வசதிகள் செய்துகொடுக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.