பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் கே.எஸ்.அழகிரி!
இந்தியை திணிக்கும் முயற்சியாக அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை உள்ளது என கேஎஸ் அழகிரி கருத்து.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பதிவிட்டுள்ள பதிவில், பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த முயற்சிகளை தீவிரப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியா பலமொழிகள் பேசுகிற பன்முகத்தன்மை கொண்ட நாடு.
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கடந்த 75 ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையை தகர்க்கிற விஷயத்தில் பாஜக அரசு தொடர்ந்து செயல்படுமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி இதில் தலையிட்டு இத்தகைய நடவடிக்கைகளை திரும்பப் பெற தவறினால் கடுமையான போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.