பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.! அரசியல் பிரமுகர் உட்பட 9 பேர் கைது.!
கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட இதுவரை 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அண்மையில் பள்ளி மாணவிகளுக்கு என்சிசி பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சுமார் 17 மாணவிகள் தனியார் பள்ளியில் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர். மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நபராக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் செயல்பட்டு வந்துள்ளார்.
புகார் ஏற்க மறுப்பு :
இந்த பயிற்சியின் போது 8ஆம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவி ஒருவருக்கு சிவராமன் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி முதலில் பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரை அப்போது பள்ளி முதல்வர் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனை அடுத்து மாணவி தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி கூறியுள்ளார்.
இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி முதல்வர் சதீஸ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனீபர், பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி, பயிற்சியாளர்கள் சக்திவேல் , பேரிகை சிந்து மற்றும் சத்யா, சுப்பிரமணி என 7 பேரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.
சிவராமன் தலைமறைவு :
இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாகக் கருதப்படும் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை, காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டம் பொன்மலைக்குட்டை பகுதியில் சிவராமன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, காவல்துறை நேரடியாகச் சென்று சிவராமனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மாவுக்கட்டு :
காவல்துறையினர் கைது செய்ய முற்படும் போது, தப்பிக்க முயன்ற சிவராமன் அருகில் உள்ள ஒரு பகுதியில் கீழே விழுந்ததில் அவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிவராமனுக்கு அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு காலில் “மாவுக்கட்டு” போடப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையை அடுத்து இதே வழக்கில் தொடர்புடைய சுதாகர் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர். காவல்துறையினர் தற்போது மேற்கொண்டு வரும் விசாரணையில் மேலும் சில மாணவிகளும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் தற்போது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சீமான் அறிக்கை :
நாம் தமிழர் முன்னாள் நிர்வாகி சிவராமன் , பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கியதை அடுத்து , உடனடியாக நாம் தமிழர் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சிவராமனை நீக்குவதாக அக்கட்சித் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டார். மேலும், இனி சிவராமன் கருத்துகளுக்குக் கட்சி பொறுப்பேற்காது என்றும், கட்சியினர் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் சீமான் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.