கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – உதகை நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்துவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் உதகை நீதிமன்றத்தில் விசாரணை.
கடந்த 2017-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் இருந்த நிலையில், சமீபத்தில் மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் சாயனுக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி, சயான் கடந்த 17-ம் தேதி ஊட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வாக்குமூலத்தில் முக்கிய நபர்களுக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். இந்த விசாரணையின் போது, புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
பின்னர், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றும் கோடநாடு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று உதகை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்று கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், நாளை தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், நாளை மறுநாள் மின்வாரிய உதவி பொறியாளர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.