கோடம்பாக்கம் – ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்…!
கோடம்பாக்கம் – ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இது ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் கோடம்பாக்கம் மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 100 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற உள்ளதால், கோடம்பாக்கம் ஆற்காடு சாலை வரையிலான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி போரூரில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லக்கூடிய வாகனங்களில் எவ்வித போக்குவரத்து மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்ல கூடிய வாகனங்கள் பவர்ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடது புறம் திரும்பி அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் போலீஸ் நிலையம் வரை சென்று, பின் வலது புறம் திரும்பி, இரண்டாவது அவென்யூ சாலை வழியாக 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று, ராஜமன்னார் சாலை 100 அடி சாலை வழி போரூர் சாலிகிராமம் செல்லலாம்.
அதேபோல கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் அம்பேத்கார் சாலையில், அசோக் நகர் போலீஸ் நிலையம் சந்திப்பு வரை சென்று இடப்புறம் திரும்பி துரைசாமி சாலை மற்றும் ஆற்காடு சாலை வழியாக செல்லலாம். மேலும் துரைசாமி சாலை வழியாக பவர்ஹவுஸ் செல்லகூடிய வாகனங்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படும். ஆனால் பவர்ஹவுஸிலிருந்து ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பு செல்லக்கூடிய வாகனங்களுக்கு அனுமதியில்லை. அதுமட்டுமல்லாமல் அம்பேத்கர் சாலையிலிருந்து அசோக் நாகர் போலீஸ் நிலைய சந்திப்பு வரை அனுமதிக்கப்பட கூடிய வாகனங்கள், அசோக் நகர் போலீஸ் நிலையம் சந்திப்பிலிருந்து, அம்பேத்கார் சாலைக்கு செல்வதற்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.