கிசான் திட்டம் முறைகேடு: குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – முதல்வர் பழனிசாமி
கிசான் திட்டத்தில் தவறு நடந்த இடங்களில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் உள்ள புதிய திட்டபணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழக்தின் கிசான் திட்டத்தின் முறைகேடு குறித்து கூறியுள்ளார். அதாவது, கிசான் திட்டத்தில் தவறு நடந்த இடங்களில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.