கே.பி.முனுசாமி விவகாரம் : “அரசியல் நாகரீகம் இல்லாத திமுக.!” இபிஎஸ் கடும் தாக்கு.!
இன்று கிருஷ்ணகிரி ராமன் தொட்டி பகுதியில் திமுகவினர் நடந்துகொண்ட விதம் திமுகவின் அராஜக போக்கை காட்டுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி தொகுதி ராமத்தொட்டி பகுதியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்த அரசு நிகழ்வில் அத்தொகுதி எம்.எல்.ஏ கே.பி முனுசாமி கலந்துகொள்ள வந்திருந்தார்.
ஆனால் , அங்கிருந்த திமுகவினர் இந்த அரசு நிகழ்வில் கே.பி.முனுசாமி பங்கேற்க கூடாது, இது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு திமுகவினர் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவினர் எதிர்ப்பை அடுத்து கே.பி.முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
பின்னர் போலீசார் இருதரப்பினர் இடையே பேச்சுவர்த்தையில் ஈடுப்பட்டனர். அதிமுக திமுக வாக்குவாதம், சாலை மறியல் என அப்பகுதியில் சுமார் 1 மணிநேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிடுகையில், ” கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் PMGSY திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியை திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு. ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் திமுகவின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.