இந்தியாவுக்காக வாக்களியுங்கள்.! குஷ்பூவின் பதிவால் குழம்பிய பாஜகவினர்.!
Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்கி தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்னும் 1 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளதால், இதுவரையில் வாக்களிக்காதோர் வாக்குசாவடியை நோக்கி விரைந்துள்ளனர்.
பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் வாக்களித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அனைவரும் வாக்களியுங்கள் என பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பூவும் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்து அதனை சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
அதில், #Vote4INDIA எனும் ஹேஸ்டேக்கை பதிவிட்டு இருந்தார். இதனால் பாஜக தொண்டர்கள் குழப்பமடைந்தனர். ஏனெனில், தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு NDA எனும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றும், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) என்ற பெயரும் வைக்கப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், அதன் ஆதரவு கட்சியினர் என பலரும் #Vote4INDIA எனும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி வரும் நிலையில், பாஜக பிரமுகர் குஷ்பூவின் இந்த பதிவு பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.