பிரதமரை மேடையில் வைத்து முதல்வர் ஸ்டாலின் கேட்ட முக்கிய கோரிக்கைகள்!

Default Image

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார்.அவருக்கு விமான நிலையத்தில்,அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.அதனை தொடர்ந்து,விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ்.அடையாறு தளம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார்.

இதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு வந்தடைந்தார்.இந்த நிகழ்ச்சி மேடையில்,பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்தனர்.இதனையடுத்து,ரூ.31,500 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.அப்போது தள்ளி நின்ற முதல்வரை அருகில் அழைத்து அவருடன் இணைந்து நலத்திட்ட உதவிகளை பிரதமர் வழங்கினார்.தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகையில் கூறியதாவது:

5 திட்டங்கள்:

இன்று,தமிழ்நாட்டில் 5 நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்கும்,ஒரு இரயில்வே திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.3 இரயில்வே திட்டங்களும், பைப்லைன் திட்டம் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ்,1,152 வீடுகளின் திறப்பு விழாவும் நடைபெறுகிறது.

இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகமிக முக்கியமான திட்டங்கள்.தமிழ்நாடு பல்வேறு வகையிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.கல்வி, பொருளாதாரம்,மருத்துவம்,வேளாண்மை,ஏற்றுமதி,திறன்மிகு மனித ஆற்றல் எனப் பல்வேறு வகையிலும் தமிழ்நாடு ஒரு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அளித்து வருகிறது.இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது.மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது.

பிரதமருக்கு தெரியும் :

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியானது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி.நமது நாட்டின் வளர்ச்சியிலும், ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு மிக முக்கியப் பங்களிப்பைத் தருகிறது என்பது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்குத் தெரியும் என்று நான் உளமார நம்புகிறேன். சிலவற்றை எடுத்துரைக்க வேண்டுமென்றால்,

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு!ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு,
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு,ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு,கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு,தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு, ஆனால் ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே.

எனவே,தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும்,பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப,ஒன்றிய அரசும் திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.அதுதான் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியாக அமையும்.

இரு முக்கிய திட்டங்கள்:

  • இப்படி நாம் இணைந்து நிறைவேற்றும் திட்டங்கள் குறித்து,இரண்டு முக்கியக் கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.ஒன்று, இத்தகைய இணைத் திட்டங்களை ஒன்றிய அரசு தொடங்கும்போது தனது நிதிப்பங்கை அதிகமாக அளித்தாலும்,காலப்போக்கில் தனது பங்கினைக் குறைத்து, மாநில அரசு செலவிட வேண்டிய நிதிப் பங்கை உயர்த்தும் நிலையைப் பார்க்கிறோம்.

இரண்டாவது, ஒன்றிய மாநில அரசுகளின் பங்களிப்போடு பயனாளிகளின் பங்கையும் முன்னிறுத்தி,பல திட்டங்கள் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படுகிறது.இதில் அந்தத் தொகையை பயனாளிகள் செலுத்த முடியாதபோது, மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிற மாநில அரசுகள்தான் பயனாளிகளின் பங்களிப்பையும், சேர்த்து செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரிக்கிறது.

எனவே, ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் ஒன்றிய அரசின் பங்கானது, திட்டம் முடியும்வரை தொடர வேண்டும் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் என்றும், திட்டங்களில், பயனாளிகளின் அவர்கள் தமது பங்களிப்பை செலுத்த முடியாதபோது ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து அதனை சமமாக ஏற்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டிற்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் வருகை தந்திருக்கும் இந்த நேரத்தில், மேலும் சில முக்கியமான கோரிக்கைகளைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் முன் வைக்க விரும்புகிறேன்.அதன்படி,

கச்சதீவை மீட்க சரியான தருணம்:

தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் நினைவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.கடந்த 15-5-2022 அன்று வரை தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய GST இழப்பீடு நிலுவைத்தொகையானது 14 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் அலுவல் மொழி:

பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய், உலகச் செம்மொழிகளில் இன்றளவும் சீரிளமைத் திறத்துடன் உயிர்ப்போடு விளங்கும் தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

இறுதியாக, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முறையைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.இது குறித்து சட்டம் நிறைவேற்றி,மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதியை,விரைந்து வழங்கிட மாண்புமிகு பிரதமர் அவர்களை இந்தத்தருணத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இக்கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.ஒன்றிய அரசின் சார்பில்,தமிழகத்தில் செயல்படுத்த முன்வந்த திட்டங்களுக்கும்,வரும் காலத்தில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களுக்கும்,நம்முடைய மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை எய்திட அனைவரும் இணைந்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம்”,என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்