இயல்பு நிலைக்கு திரும்பும் அமைச்சர் செந்தில் பாலாஜி.! 20 நாளுக்கு தொடர் சிகிச்சை.!
செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை அளிக்கப்படும் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 21ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பிறகு 24ஆம் தேதி வரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி , அதன்பிறகு தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். இன்னும் அவர் தானாக உணவு எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாலும், எழுந்து நடக்க முடியாத சூழலில் இருப்பதாலும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
தொடர்ந்து அவருக்கு நடப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திட உணவுகள் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 20 நாள் மருத்துவர்கள் சிகிச்சையில் இருக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிறைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அனுமதி பெற்று தான் சந்திக்க முடியும். ஆனால் தற்போது வரை அவரை குடும்பத்தினர் சந்திக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.