கவரப்பேட்டை ரயில் விபத்து., மீட்புப்பணிகள் நிறைவு., NIA அதிகாரிகள் தீவிர சோதனை.!
கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றப்பட்டுவிட்டன. தற்போது NIA அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை : நேற்று (அக்டோபர் 11) இரவு 8.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து கவரப்பேட்டை செல்லும் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த மைசூர் (கர்நாடகா) – தர்பங்கா (பீகார்) செல்லும் பாக்மதி விரைவு ரயில், சரக்கு ரயில் மீது விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. சரக்கு ரயில் முழுவதும் காலியாக இருந்ததால் விபத்தின் அதிர்வு மொத்தத்தையும் சரக்கு ரயில் பெட்டி உள்வாங்கி கொண்டு ரயில்வே தண்டவாளம் குறுக்கே விழுந்துவிட்டது. இல்லையேல் பெருமளவு உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறுகின்றனர் வல்லுநர்கள்.
கவரப்பேட்டையில் மொத்தம் 4 ரயில்வேபாதைகள் உள்ளது. அதில், 2பிரதான ரயில் தடம். அதில் தான் முக்கிய ரயில்கள் பயணிக்கும். அடுத்து ஒரு மாற்று பாதை, ஒரு லூப் பாதை உள்ளது . இதில் லூப் பாதையில் தான் சரக்கு ரயில் நின்றுள்ளது. அப்போது கவரப்பேட்டை நோக்கி வந்த எக்ச்பிரஸ் ரயிலுக்கு லூப் பாதையில் கிரீன் சிக்னல் விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தான் லூப் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று விபத்துக்குள்ளானது என தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், லூப் பாதையில் கிரீன் சிக்னல் கொடுத்தது யார்.? தானியங்கி கருவி தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்வாறு கொடுத்துவிட்டதா என்ற கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட் என மொத்தம் 13 பேருக்கு தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் வேறு ஏதேனும் சமூக விரோத உள்ளீடுகள் இருக்கிறதா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் (NIA) ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 6 சரக்கு பெட்டிகள் ரயில்வே தண்டவாளங்கள் குறுக்கே இருந்ததால் அவ்வழியாக செல்லும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பல ரயில்கள் வேறு வழித்தடத்திற்கு மாற்றப்பட்டன.
நேற்று இரவு முழுவதும், மழையையும் தாண்டி மீட்பு பணிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வந்தனர். தேசிய மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் ராட்சச கிரேன் இயந்திரங்கள் மூலம் ரயில் பெட்டிகள் அகற்றும் பணிகள் நடைபெற்றன. இந்த மீட்பு பணிகள் தற்போது முழுதாக முடிந்துள்ளன. தடம் புரண்ட ரயில் பெட்டிகள் முழுவதும் தற்போது அகற்றப்பட்டுள்ளன.