கவரப்பேட்டை ரயில் விபத்து., தொடரும் மீட்புப் பணிகள்., 18 ரயில்கள் ரத்து.!
நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கான மீட்புப்பணிகள் தற்போது வரையில் நடைபெற்று வருகின்றன.
சென்னை : நேற்று காலை கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் தர்பங்கா நோக்கி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் நேற்று இரவு 8.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி – கவரப்பேட்டைக்கு இடையே அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது அங்கு தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி 6 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 2 ரயில் பெட்டிகள் தீப்பிடித்தன.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட பயணிகள் ரயிலில் இருந்து வெளியே வந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தேசிய மீட்புப்படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் களமிறங்கினர். இந்த ரயில் விபத்தில் இதுவரை 19 பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டு அவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில் , ” ரயில் விபத்தில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. சரக்கு ரயில் பெட்டிகளில் தீப்பற்றியுள்ளன. பயணிகள் ரயில் பெட்டியில் 1360 பயணிகள் பயணித்துள்ளனர். 19 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மற்ற லேசான காயங்கள் ஏற்பட்ட பயணிகள் பொன்னேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த உடன் முதலமைச்சர் உடனடியாக தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். ” எனகூறினார்.
ரயில் விபத்தில் காயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பயணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர்களுடன் விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் து. முதல்வர் உதயநிதி பேசுகையில், ” ரயில் விபத்துகள் தொடர் கதையாகி வருவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.” என குறிப்பிட்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா , தெலுங்கானா , வட மாநிலங்கள் செல்லும் ரயில் தடத்தில் விபத்து நிகழ்ந்துள்ளதால், சுமார் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு ரயில்களின் வழித்தடம் , நேரம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் முதல் விஜயவாடா செல்லும் ஜன் சதாப்தி விரைவு ரயில், விஜயவாடாவில் இருந்து செல்லும் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ஜன் சதாப்தி விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஷாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும், மேலும் இந்த ரயில் அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் இயங்கும் என்றும், எஸ்எம்விடி பெங்களூரு – டானாப்பூர் சங்கமித்ரா விரைவு ரயில், தர்மாவரம், காஸிபேட் வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நேற்று இரவு இந்த ரயில் விபத்து நிகழ்ந்தும் ,அடுத்து தொடர் மழை காரணமாக மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், தற்போது வரையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் எனமொத்தம் 300க்கும் அதிகமான வீரரக்ள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.