ஒரு வருட உண்டியல் பணத்தை நிவாரண நிதியாக வழங்கிய கரூர் சிறுமி.!
கரூர் சங்கமும் அறக்கட்டளைக்கு சிறுமி கன்யா தனது ஒரு வருட உண்டியல் சேமிப்பு பணமான 2,040 ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கமம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஆதரவற்றவர்கள் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அறக்கட்டளையினர் கடந்த சில மாதங்களாக கரூரில் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளதால், தற்போது இந்த தொண்டு நிறுவனமானது ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருவதோடு மட்டுமில்லாமல் ஏழை மக்களுக்கு நிவாரண உதவியாக அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
சங்கமம் அறக்கட்டளையின் நல்ல நோக்கத்தை அறிந்த கரூர் ஆத்தூர் பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் தனது மகள் கன்யா-வின் ஒரு வருட உண்டியல் சேமிப்பு பணமான 2,040 ரூபாயை சங்கமம் அறக்கட்டளை நிர்வாகிகளான உதயகுமார், சரவணன், செல்வராஜ் ஆகியோரிடம் நேரில் சென்று கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர். நிவாரண தொகையை பெற்றுக்கொண்ட சங்கமம் அறக்கட்டளையினர் சிறுமி கன்யாவிற்கு தங்களது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர்.