கருணாநிதியின் குடும்ப சொத்து விவரம்..!பத்திரிகையாளர் முன் ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? முடியாதா? அமைச்சர் உதயகுமார் சவால்
கருணாநிதியின் குடும்ப சொத்து விவரங்கள் பற்றி மு.க.ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
சமீபத்தில் குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.
அதேபோல் காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் அதற்கு ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார்.எனவே அமைச்சர் தங்கமணி பதவி விலகு வாரா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மேலும் ஒரு அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , அரசு ஒப்பந்தங்களை தன் உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை “கொள்ளையாட்சி துறையாக” மாற்றியிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அராஜகங்களை வெளியிட்ட தனியார் பத்திரிகையாளர்களை மிரட்டிய அமைச்சரின் கான்ட்ராக்டரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசின் கஜானாவை, தனது உறவினர்கள் மற்றும் பினாமிகளின் நிறுவனங்கள் மூலம், அப்படியே “ஹைஜாக்” செய்து கொள்ளையடித்து வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் தி.மு.கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரின் மீதும் தி.மு.க.வின் சார்பில் ஆதாரங்களுடன் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இவர்கள் மட்டும் அல்லாமல் 3,120 கோடி ரூபாய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல் மீதும், ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி அதில் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடமும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.இப்படி அதிமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மீது திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குற்றசாட்டிவருகிறார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், கருணாநிதியின் குடும்ப சொத்து விவரங்கள் பற்றி மு.க.ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? என்று மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.மேலும் கருணாநிதி, மகன்கள், மகள்கள் உள்ளிட்டோரின் சொத்து விவரம் பற்றி கேள்விகேட்க நான் ஒருகுழு நியமிக்கிறேன். பத்திரிகையாளர் முன் எனதுகுழு கேட்கும் கேள்விகளுக்கு ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? முடியாதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,ஸ்டாலின் முதலமைச்சர், அமைச்சர்கள் மீது உண்மைக்கு புறம்பாக, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.மேலும் பொறுப்பற்ற அவதூறு பேச்சுகளை நிறுத்திக்கொண்டு, பண்பட்ட அரசியல் பணிகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார் .