இயலாமையை மறைக்க அன்றைக்கு கருணாநிதி, இன்றைக்கு ஸ்டாலின் – டிடிவி தினகரன் ட்வீட்
மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம் என்று புதிய வேஷம் கட்டுவது திமுகவின் வழக்கமாக இருக்கிறது என டிடிவி தினகரன் ட்வீட்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, “அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்” என வீராவேசமாக பேசிவிட்டு பதவிக்கு வந்தபிறகு, “மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்” என்று புதிய வேஷம் கட்டுவது தி.மு.கவின் வழக்கமாக இருக்கிறது.
இவர்களின் இயலாமையை மறைக்க அன்றைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்ததை இப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் செய்கிறார். அரசு ஊழியர் சங்க மாநாட்டில் இப்படி ஓர் அடிமை ராகத்தை அவர் இசைத்திருக்கிறார்.
அரசாங்கத்திற்கு ரூ.5 லட்சம் கோடி கடன் இருப்பது தேர்தல் நேரத்தில் இஷ்டப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசிய போது ஸ்டாலினுக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்களை வைத்திருக்கிற..
ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுய பச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சிக்கலாமா? “ எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ்நாட்டிலே“ என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி முதல் வெள்ள நிவாரண நிதிவரை மத்திய அரசு சரியாக வழங்குவதில்லை என்றும் கொத்தடிமைகளை போல் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் மாநில அரசு உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, “அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்” என வீராவேசமாக பேசிவிட்டு பதவிக்கு வந்தபிறகு, “மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்” என்று புதிய வேஷம் கட்டுவது தி.மு.கவின் வழக்கமாக இருக்கிறது. (1/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 20, 2021