ஒரே நாடு ஒரே தேர்தளுக்கு கருணாநிதி ஆதரித்தார்..நீங்க எதிர்ப்பு தெரிவிக்கிறீங்க? பிரேமலதா கேள்வி!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை : ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதனையடுத்து, மக்களவையில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்,மசோதா நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு விவாதத்திற்காக அனுப்பப்படும் எனவும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் விவாதம் நடத்தி அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சட்டமசோதா தாக்கல் செய்வதற்கு முன்பிலிருந்தே திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வந்தார். இந்த சூழலில், கலைஞர் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தார் நீங்க கூட்டணியில் இல்லாததால் எதிர்ப்பு தெரிவிக்கிறீங்களா? என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஓய்வூதியம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது ” ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஆதரித்து எழுதியுள்ளார். அவர் ஆதரவு தெரிவித்தபோது எதற்காக மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை.
இப்போது திமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிா்க்கிறாரா? என்பதை அவர் தான் விளக்கமாக சொல்லவேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ” ஒரே நாடு ஒரே தேர்தல் அனைவரின் ஆதரவுடனே அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியாவில் 140 கோடிக்கு மேல் மக்கள் உள்ளனா். எனவே, அவர்கள் அனைவர்க்கும் மத்திய அரசு இதனை பற்றி விளக்க வேண்டும்” எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.