கருணாநிதி, ஜெயலலிதா மறைவால் தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் உள்ளது – அண்ணாமலை
பிரதமர், உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்து சென்றிருப்பது மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது என மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவால் தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் உள்ளது. தமிழக பாஜக அந்த இடத்தை சரியாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். 10 % இட ஒதுக்கீட்டை திமுக எதுவுமே தெரியாமல் தன் பிராமண எதிர்ப்பை மட்டுமே வைத்து அரசியல் செய்கிறது.
இந்த இடஒதுக்கீட்டை இந்திய அளவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரிக்கிறார்கள். திமுக அதன் ஒரு சில கூட்டணி கட்சிகளை சேர்த்துகொண்டு அனைத்துக் கட்சி கூட்டம் என சொல்வது வேடிக்கையானது. திமுகவை பொறுத்தவரை பாஜகவை எதிரியாக பார்க்கிறார்கள், எங்களை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறோம்.
திமுகவை ஆக்கப்பூர்வமாக எதிர்ப்போம், தமிழக மக்களுக்கு பாஜக மீது அன்பு பெருகி வருகிறது, அரசியலை அரசியலாக எதிர்கொள்வோம். பிரதமரை நேற்று சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, அப்போது தமிழ்நாடு மக்களை குறித்தும், தமிழகத்தில் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். பிரதமர் தமிழ்நாடு மக்களிடம் அளவுக்கதிகமாக பாசம் கொண்டவர். பிரதமர், உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்து சென்றிருப்பது மிகுந்த ஊக்கத்தை எங்களுக்கு கொடுக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பொறுத்தவரை நமது தாய்மொழியை தான் பிரதானமாக வைக்க வேண்டும் என்கிறார். மேலும், பொறியியல் படிப்பை தமிழ்வழியில் கொண்டு வர வேண்டும் என அமித்ஷா கூறியதாகவும், ஓபிஎஸ், மற்றும் இபிஎஸ் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தார்கள் எனவும் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.