#கந்தசஷ்டி_கொச்சைப்பேச்சு-“சாது மிரண்டால் காடு கொள்ளாது” கண்டனம்
‘கருப்பர் கூட்டம்’ என்கிற பெயரில், ‘யூ டியூப் சேனலில்’ஆபாச புராணம் என்கிற பெயரில் புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை மிகவும் கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளதாகவும் இதனைப் போன்ற அருவருக்கதக்க கருத்துகளை பரப்பி வருவதாக தமிழகத்தில் முருக பெருமானை கடவுளாக வழிபடுகின்ற மக்கள் மட்டுமின்றி ஹிந்து முன்னனி தலைவர்களும் கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
அவ்வாறு தேவராய சுவாமிகள் அருளிய ‘கந்தர் சஷ்டி கவசம்’ குறித்து, ‘யு டியூப்’ சமூக வலைதளத்தில் இழிவாக பேசியவர், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது புரிந்து, மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தமிழக தர்மரக்சன சமிதி தலைவர் ஓங்காரானந்தா, சுவாமி சிவயோகானந்தா உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தர்மரக்சன சமிதி தலைவர் சுவாமி ஒங்காரானந்தா கூறியதாவது: கந்தர் சஷ்டி கவசத்தை ஏன்? இழிவாக பேசினர் எனத் தெரியவில்லை. கந்தர் சஷ்டி கவசத்தை பக்தியுடன் பாடுவோருக்கு மன நிம்மதி கிடைக்கும். நம் சாஸ்திரப்படி, நம் உறுப்புகள் உயர்ந்தவை.
அந்த வகையில், பால் தரும் தாயின் மார்பகம் ஆனது தெய்வீகம். மதங்களின் நம்பிக்கையினை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். உடல், உடை கறுப்பாக இருக்கலாம்.
ஆனால், உள்ளம் கறுப்பாக இருக்கக் கூடாது. கந்தர் சஷ்டி கவசத்தை இழிவாக பேசியவர் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை புரிந்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதே போல மதுரை சின்மயா மிஷன், சுவாமி சிவயோகானந்தா இது குறித்து கூறியதாவது: சமீபகாலமாக ஹிந்து கடவுள், நுால்களை இழிவாக பேசி, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். கந்தர் சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசுவதால், ஹிந்துக்களின் நம்பிக்கை சிதையாது; மாறாக ஹிந்துக்களிடம் ஒற்றுமையும், எழுச்சியையுமே ஏற்படுத்தும். கந்தர் சஷ்டி கவசம் போல, பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசத்தை பாடுவது உடல், மனதிற்கு மாமருந்து. இழிவாக பேசுபவர்கள் பின்னணி குறித்தும் கண்டறிந்து மீண்டும் பேசாமல் தடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இவ்விவகாரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் கூறியதாவது: சமீபகாலமாக, ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை, பதிவுகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தும் போக்குகள் அதிகரித்து வருகிறது.
முருக பக்தர்கள் அனைவரும் மிகவும் புனிதமாக கருதும், கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது, முருக பக்தர்களை மட்டுமின்றி, அனைத்து ஹிந்து மக்களின் மனதையும் கடுமையாக காயப்படுத்துவதாக உள்ளது. மத துவேஷ கருத்துகளை பதிவிட்டு சர்ச்சைகளை உருவாக்குபவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று அவர் கூறியுள்ளார்.