“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!
இந்தி திணிப்பு குறித்த பவன் கல்யாணின் பழைய பதிவுகளை பகிர்ந்து திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு எதிர்த்து வருகிறது. இந்த சூழலில், தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும்? என ஹிந்தி மொழிக்கு ஆதரவாக ஆந்திரா துணை முதல்வர் பவான் கல்யாண் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
பவான் கல்யாண், நேற்று ஜனசேனா கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் பேசும் போது, “தனது கட்சி விழாவில் தமிழ், கன்னடம், மராத்தி, ஹிந்தி மொழிகளில் பேசியவர், ஏன் இத்தனை மொழிகளில் பேசுகிறேன் என கேட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு மட்டுமல்ல, தேசத்திற்கே பல மொழிகள் தேவை எனவும், அப்போதுதான் ஒரு மாநிலத்தவரை, பிற மாநிலத்தவர் புரிந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொள்ள முடியும் என்று கூறி தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பை பவன் கல்யாண் விமர்சித்திருந்தார்.
மேலும், தமிழ் படங்களை ஏன் ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், வடமாநிலங்களின் காசு மட்டும் வேண்டும், ஆனால் அவர்களின் மொழி வேண்டாமா எனவும் அவர் வினவியுள்ளார். ஒரு மொழிக்கு எதிராக ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது எனவும், சமஸ்கிருதமும், ஹிந்தியும் நமது தேசத்தின் மொழிகள் அல்லவா எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ் படங்களை ஹிந்தியில் டப் செய்ய வேண்டாம் மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது’ என்று குறிப்பிட்டதோடு, “பாஜகவில் சேருவதற்கு முன்பு பவன் கல்யாண் இந்தி திணிப்பு குறித்து பேசிய பதிவுகளையும், தற்போது பேசியதையும் ஒப்பிட்டு, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பும், கூட்டணி அமைத்த பின்பும் பவன் கல்யாண் மாறி மாறி பேசுகிறார்” என்று கூறியிருக்கிறார்
Technology allows us to watch movies beyond language barriers. https://t.co/mT03mJARqM pic.twitter.com/w3qRgcSsCY
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 15, 2025