‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவிற்கு எதிராக கனிமொழி, டி.ஆர்.பாலு நோட்டீஸ்.!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு எதிர்த்துப் பேச திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது.
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 அன்று தொடங்கி டிசம்பர் 20 அன்று நிறைவடைகிறது. இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைபடி, மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை டிச.12இல் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு எதிராகப் பேச அனுமதி கோரி திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணிக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் தாக்கல் செய்யவுள்ளார்.
ஒருவேளை இன்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள்’ தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டால் அடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலோடு மத்திய அரசு, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.